தமிழகத்தில் சொத்து வரி அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் சொத்து வரி அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா?

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது தமிழக அரசு. அதே நேரத்தில் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் சொத்து வரி மிகவும் குறைவாக இருக்கிறது.

மத்திய அரசின் 15-வது நிதி ஆணையம் விதித்த நிபந்தனை அடிப்படையில் சொத்து வரி உயர்த்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் பிரதானப் பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், 600 முதல் 1200 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், 1801 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 150 சதவீதமும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு, 2011-ல் சென்னையோடு இணைந்த பகுதிகள் மற்றும் பிற மாநகராட்சிகளில் 600 சதுர அடிக்குக் குறைவான குடியிருப்புகளின் கட்டிடங்களுக்கு 25 சதவீதமும், 600 முதல் 1200 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும், 1801 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை பிரதானப் பகுதிகளில் உள்ள வணிகப் பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 150 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையோடு 2011-ல் இணைக்கப்பட்ட பகுதிகள், பிற மாநகராட்சிகளின் உள்ள வணிகப் பயன்பாட்டுக் கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 75 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், நகராட்சிகள், பேரூராட்சிகளில் 600 சதுர அடிக்கு கீழ் உள்ள குடியிருப்புகளுக்கு 25 சதவீதமும், 601 முதல் 1200 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும், 1800 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் சொத்து வரி குறைவு என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. உதாரணமாக சென்னை மாநகராட்சியில் 600 சதுர அடி குடியிருப்புக்கு ரூ.1,215-ம், மும்பையில் ரூ.2,157-ம், பெங்களூருவில் ரூ.3,464-ம், கொல்கத்தாவில் ரூ.3,510-ம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. சொத்து வரிக்கான சீராய்வு, 2022-23-ம் ஆண்டின் முதலாம் அரையாண்டு முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in