‘ஆர்.என்.ரவி ஆளுநரா, புதிய கல்விக் கொள்கையின் தூதரா?'

பிரின்ஸ் கஜேந்திர பாபு பேட்டி
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முன்வைத்த கருத்துகள் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன. புதிய கல்விக் கொள்கையைப் பலரும் முழுமையாகப் படிக்கவில்லை என்றும் இதில் உள்ள நல்ல விஷயங்களை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பேசியிருந்தார். இதற்கு, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளரும், கல்வியாளருமான பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக இன்று வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில், ‘தான் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் தனக்கு வழங்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றும் மாநிலத்தின் அரசமைப்புச் சட்டத் தலைவரா அல்லது புதிய கல்விக்கொள்கையின் தூதராக நியமிக்கப்பட்டவரா என்பதை ஆளுநர் தெளிவுபடுத்த வேண்டும்’ எனக் கோரியிருக்கிறார். மேலும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஆளுநர் அவமதிப்பதாகவும், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சமாக இருக்கும் கூட்டாட்சிக் கட்டமைப்பைச் சிதைக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதுகுறித்து பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம்.

புதிய கல்விக் கொள்கையைப் பலரும் முழுமையாகப் படித்ததாகத் தெரியவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார். அது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அதை ஆளுநர் முதலில் முழுமையாகப் படித்தாரா என்பதுதான் எங்கள் கேள்வி. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், தேசிய வரைவுக் கல்விக் கொள்கை குறித்து ஆராய்வதற்கு, இன்றைய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் தங்கம் தென்னரசு உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மத்திய கல்வி அமைச்சரைச் சந்தித்து புதிய கல்விக் கொள்கை தொடர்பான தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தது. ஆட்சிக்கு வந்த பிறகு, புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது ஏன் என்பதை தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், உயர்கல்வித் துறை அமைச்சரும் பல முறை விளக்கியிருக்கிறார்கள். மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கண்டித்திருக்கிறார். நீட் தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்துவருகிறது. இதற்கெல்லாம் ஆளுநரின் பதில் என்ன?

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர், தலைமைச் செயலாளர் எனப் பலர் ஆளுநரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். தன்னைச் சந்தித்த பலரும் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக வாசிக்கவில்லை என்று ஆளுநர் சொல்கிறார் என்றால் அமைச்சர்கள் உட்பட அவர்கள் அனைவரும் அதை வாசிக்கவில்லை என்று பொத்தாம்பொதுவாகக் குற்றம்சாட்டுகிறாரா? பல்வேறு அமைப்புகள் புதிய கல்விக்கொள்கையில் உள்ள பிரச்சினைகள் குறித்து அறிக்கைகளை வெளியிட்டனவே, அவற்றையெல்லாம் ஆளுநர் முழுமையாக வாசித்திருக்கிறாரா? இவ்வளவு ஏன், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழக அரசின் மசோதாவின் நிலை குறித்து 2022 மார்ச் 29-ல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் நான் தாக்கல் செய்த மனுவுக்கு இதுவரை ஆளுநர் மாளிகையிலிருந்து பதில் வரவில்லை. இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீறும் செயல் இல்லையா? சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதா அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதை ஆய்வுசெய்வதுதானே அவரது பணி? இதுபோன்ற முக்கியமான மசோதாக்கள், மனுக்களை நேரம் கிடைக்கும்போதுதான் வாசிப்பேன் என்று தள்ளிப்போடுவது தவறான முன்னுதாரணம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தவிடாமல் ஆளுநர் தடுப்பதாகக் கூறியிருக்கிறீர்களே?

தேர்தல் அறிக்கையில் கூறிய விஷயங்களை ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்ற முயல்வதுதான் அரசியல் கட்சிகளின் பணி. அந்த அடிப்படையில்தான் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள். அதற்கு ஒரு மரியாதை கிடையாதா? ஏறத்தாழ எல்லா அரசியல் கட்சிகளும் வாக்குக்குப் பணம் கொடுக்கிறார்கள் எனும் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், தேர்தல் வாக்குறுதியை வைத்துதான் வாக்களிப்பது மக்களின் வழக்கம். நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கித் தருவது, புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பது என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளைத் தேர்தலின்போது திமுக அளித்திருந்தது. ஆட்சிக்கு வந்த பின்னர் அவற்றை நிறைவேற்ற முயற்சிக்கிறது. அவற்றை நிறைவேறாமல் தடுப்பது சரியா? வாக்குச்சீட்டில் ஆட்சியை மாற்ற முடியும் என்று நம்பும் மக்கள் அந்த நம்பிக்கையை இழந்துவிடும் வகையில் ஒரு சூழ்ச்சி நடக்கிறது. அதில் ஒரு பகுதிதான் ஆளுநரின் நடவடிக்கைகள். மக்களாட்சி மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் வகையில் இதுபோல் ஆளுநர் செயல்படுவது சரியல்ல.

‘ஒரு பிராந்திய, புவியியல் அமைப்பு சார்ந்த பிரதேச உள்ளுணர்வோடு கல்விக் கொள்கையை அணுகி இருக்கிறோம்’ என்று ஆளுநர் பேசியிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டாடும் அம்சத்தை இதுவரையிலான கல்விக் கொள்கைகள் கொண்டிருந்தன. இந்தியாவின் பன்முகத்தன்மையை, பன்முகப் பண்பாட்டை அவை அங்கீகரித்தன. வேற்றுமையில் ஒற்றுமைதான் ஒருமைப்பாட்டைக் காக்கும். ஆனால், புதிய கல்விக் கொள்கைதான் பன்முகத் தன்மையைச் சிதைத்துவிட்டு ஒற்றைப் பண்பாட்டை நிறுவ முயற்சிக்கிறது. ஆளுநர் அதை மறைத்துவிட்டுப் பேசுகிறார்.

படிப்பைப் பாதியில் கைவிட்டாலும் மீண்டும் தொடர புதிய கல்விக் கொள்கையில் வாய்ப்பு உள்ளது என்று ஆளுநர் கூறுகிறாரே?

சமூகத்தையும் மக்களுடைய வாழ்விலையும் புரிந்துகொள்ளாமல், என்ன பேச வேண்டும் எனத் தனக்கு கொடுக்கப்பட்டதை மட்டும் ஆளுநர் பேசுகிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. புதிய கல்விக் கொள்கை அடித்தட்டு சமூகங்களைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறையாகப் படிக்க வருபவர்களைப் போட்டித் தேர்வுகள், தரம் என்றெல்லாம் சொல்லி கல்வியிலிருந்து விலக்கிவைக்கிறது என்பதுதான் உண்மை. பின்தங்கிய சமூகத்திலிருந்து வரும் பெரும்பாலான குழந்தைகள் எவ்வளவு இடர்ப்பாடு இருந்தாலும் அவர்கள் தங்கள் கல்வியை நிறைவுசெய்ய முடியும் எனும் வாய்ப்பை இன்றைய கல்வி முறை வழங்குகிறது. ஆனால், மாணவர்கள் புறச்சூழல்கள் காரணமாகப் படிக்க முடியவில்லை என்றால் வெளியேறுவதற்கான வாய்ப்புகளைத்தான் புதிய கல்விக் கொள்கை உருவாக்குகிறது. குறிப்பிட்ட வயதுக்குள் பள்ளிப் படிப்பை, கல்லூரிப் படிப்பை முடித்தால்தான் அந்தக் கல்வி ஒருவருக்குப் பயன்படும், வெளியேறி வெளியேறி கல்லூரிக் கல்வியைத் தொடர்ந்தால் அவர்களால் வேலைவாய்ப்பைப் பெற முடியாது என்பதுதான் நிதர்சனம்.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இதுவரை ஆளுநராகப் பதவிவகித்தவர்கள், சில தருணங்களில் தமிழக அரசுடன் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்ததை மறுக்க முடியாது. ஆனால், இவர்தான் பிரச்சார பீரங்கியாக இருக்கிறார். அரசமைப்புச் சட்டத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிறார். புதிய கல்விக் கொள்கைக்கான தூதர் போல செயல்படுகிறார். அதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in