
தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 18-ம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதன்பின்னர் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு வரும் இன்று (ஏப்.6) தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில், மதுராந்தகம் தொகுதி அதிமுக உறுப்பினர் மரகதம் குமரவேல் பேசும்போது, வேடந்தாங்கல் ஊராட்சியில் வசிக்கும் மக்கள், ஆரம்ப சுகாதார நிலையம் செல்வதற்கு 20 முதல் 25 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க வேண்டிய நிலை இருப்பதாகக் கூறினார். வேடந்தாங்கல் சுற்றுவட்டார மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு மிகவும் அவதிக்குள்ளாவதாகத் தெரிவித்த அவர், அப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தீவிர வழிகாட்டுதலின்படி, மத்திய அரசின் சார்பில் கிராமப்புறங்களில் 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புறங்களில் 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க அனுமதி பெறப்பட்டிருக்கிறது. மக்கள்தொகை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அவை எங்கெங்கே அமைய வேண்டும் என்பதை அரசு முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.