`பேரறிஞர் அண்ணா வழியை பின்பற்றுங்கள் முதல்வரே'

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை
`பேரறிஞர் அண்ணா வழியை பின்பற்றுங்கள் முதல்வரே'

``தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கும் செயல்பாட்டில் தமிழக முதல்வர் ஒன்றிய அரசைப் பின்பற்றாமல் பேரறிஞர் அண்ணா வழியைப் பின்பற்ற வேண்டும்" என்று முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

ஆசிரியர்கள் கல்வியில் புதுமைகளைப் புகுத்தவும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் எம்.எட்., எம்ஃபில் மற்றும் பி.ஹெச்டி., போன்ற உயர்கல்வி மிக அவசியம். இதுபோல் அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அவர்கள் பணிபுரியும் துறையை மேம்படுத்தவும், புதுமைகளை புகுந்தவும் உயர்கல்வி அவசியம். இவற்றை பயில செலவு அதிகம் பிடிக்கும். இதற்காக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு உயர்கல்விக்கான ஊக்க உதவித் தொகையை வழங்கி வந்தது. இந்த ஊக்க ஊதியம் அவர்கள் பணிபுரியும் காலம் வரை வழங்கப்படும். அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த காலம் முதல் இந்த ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வந்தது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த ஊக்கத் தொகை பழைய நடைமுறைப்படி வழங்கப்படும் என அறிவித்தார். திமுகவின் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையிலும் இந்த அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பெற்றிடும் கூடுதல் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஒன்றிய அரசால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி வழங்கப்படும் என தமிழக அரசின் மனிதவள மேலாண்மை துறை ஆணை வெளியிட்டுள்ளது.

இது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவிர, இந்த அராசணையை திரும்பப் பெற்று பழைய முறைப்படி உயர்கல்வி ஊக்க உதவித்தொகையை அரசு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ஆ.ராமு கூறுகையில், "தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து பெறப்பட்டு வந்தது. இந்த நடைமுறையினை கடந்த அதிமுக தலைமையிலான ஆட்சியாளர்கள் ரத்து செய்து அரசாணை வெளியிட்டார்கள்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டதை நீக்கி பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பழைய முறையிலான ஊக்க ஊதிய உயர்வை அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்குவோம் என அறிவித்தார். மேலும், அதிமுக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து கண்டன அறிக்கையும் வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பு திமுக சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றிருந்தது. ஆனால், இந்த அறிவிப்புக்கு நேர்மாறாக தற்போது தமிழக அரசால், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பெற்றிடும் கூடுதல் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஒன்றிய அரசால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி வழங்கப்படும் என மனிதவள மேலாண்மை துறையால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ஆ.ராமு
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ஆ.ராமு

இது தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல ஆயிரங்கள் செலவு செய்து கூடுதல் கல்வித் தகுதிக்கான பட்டத்தை பெற்று வருகிறார்கள். ஆனால் ஒன்றிய அரசைப் பின்பற்றி மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மிக குறைந்த அளவும், அதுவும் ஒருமுறை மட்டுமே ஊக்க ஊதியம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பள்ளிக் கல்வித் துறையில் முன்னணி இடத்தை தமிழகம் பெற்றிருப்பதற்கு முக்கிய காரணம் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பிறகு கூடுதல் கல்வி தகுதியை பெற்று அது சார்ந்த நிகழ்கால தகவல்களை, முற்போக்கு சிந்தனைகளை, முற்போக்கு செயல்பாடுகளை அரசுப்பள்ளிகளில் பாடம் சார்ந்து செயல்படுத்தி வருவதும் ஒரு காரணம். ஆசிரியர்கள் பெரும் கூடுதல் கல்வித்தகுதி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு சமுதாயத்திற்கும் ஊக்கம் அளிப்பதோடு ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்க்கைக்கும் ஊக்கமளிக்கும். எனவே தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கும் செயல்பாட்டில் தமிழக முதல்வர் ஒன்றிய அரசைப் பின்பற்றாமல் பேரறிஞர் அண்ணா வழியைப் பின்பற்ற வேண்டும். இந்த நடைமுறை பின்பற்றுவது தொடர்பாக வரும் பட்ஜெட்டில் முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in