நெகிழ்ச்சி... அரசு பேருந்துக்கு கிடாய் வெட்டி பூஜை செய்த பயணிகள்!

அரசு பேருந்துக்கு கிடாய் வெட்டி பூஜை
அரசு பேருந்துக்கு கிடாய் வெட்டி பூஜை

சத்தியமங்கலம் பண்ணாரியில் அரசு பேருந்துக்கு தொழிலாளர்கள் கிடாய் வெட்டி பூஜை நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் காலை 6.40 மணி அளவில் பண்ணாரி, ராஜன்நகர், பசுவபாளையம், புஞ்சைபுளியம்பட்டி, திருப்பூர், திண்டுக்கல் வழியாக தேனிக்கு அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் பல ஆண்டுகளாக பண்ணாரி மற்றும் ராஜன்நகரை சேர்ந்த 36 தொழிலாளர்கள் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகிறார்கள். இது அவர்களுக்கு மிகவும் சவுகரியமாக இருந்து வருகிறது.

இதனால் தொழிலாளர்கள் அந்த பேருந்துக்கு திருஷ்டி கழிக்க ஆண்டு தோறும் ஆடி மாதம் கிடாய் வெட்டி பூஜை செய்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தொழிலாளர்கள் பேருந்துக்கு பூஜை செய்யவில்லை. இந்நிலையில், 3 ஆண்டு்களுக்கு பிறகு இந்த ஆண்டு தொழிலாளர்கள் பூஜை நடத்த முடிவு செய்தார்கள். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்த பேருந்து பண்ணாரி வழியாக வந்து கொண்டிருந்தது.

அப்போது அங்கு பேருந்து ஏற வந்த தொழிலாளர்கள் பேருந்தை நிறுத்தி மாலை அணிவித்து சந்தனம், திருநீறு, குங்குமம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் கிடாய் பலியிட்டு பூஜை நடத்தினார்கள். இது அங்கு வந்த மற்ற பயணிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஏராளமான அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களும், அப்பகுதி தொழிலாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in