சிலை வடிவில் வந்த தந்தை... சிலிர்க்க வைத்த போலீஸ் மகன்!

சிலை வடிவில் வந்த தந்தை... சிலிர்க்க வைத்த போலீஸ் மகன்!

இரண்டு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த தந்தையின் உருவத்தை அச்சு அசலாய் மெழுகில் சிலையாக வடித்து அதையே தந்தையென பாவித்து அந்தத் தந்தையின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட காவலரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

திருமண ஊர்வலத்தில் மெழுகு சிலையுடன் மணமக்கள்...
திருமண ஊர்வலத்தில் மெழுகு சிலையுடன் மணமக்கள்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பெரும்பட்டு. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அன்பரசு, கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் ஓட்டுநராக பணியாற்றுகிறார். இவரது தந்தை சங்கர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டார்.

இந்நிலையில், சோழபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியாவுக்கும் அன்பரசுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. அப்போது காவலர் அன்பரசு, சிறுவயது முதலே தன்னை பாசமாக வளர்த்து ஆளாக்கிய தந்தையும் தனது திருமணத்தில் ஆத்மார்த்தமாக கலந்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டு, தந்தைக்கு மெழுகு சிலை செய்துள்ளார்.

தந்தை சிலையுடன் அன்பரசு...
தந்தை சிலையுடன் அன்பரசு...

திருமணச் சடங்குகள் நடந்த இடத்தில் தந்தையின் மெழுகுச் சிலையைக் கொண்டுவந்து வைத்து அதன் முன்னிலையில் திருமண சடங்குகளை செய்து கொண்டார் அன்பரசு. திருமணம் முடிந்து நடந்த திருமண ஊர்வலத்தின்போதும் தந்தை சிலையை அருகில் வைத்துக் கொண்டேதான் சென்றார். 

காலமாகிவிட்ட தந்தையை மெழுகு சிலையாக வடித்து அதைக் கல்யாண விழாவில் காட்சிக்குக் கொடுத்ததுடன் மட்டுமல்லாது, அந்த சிலையையே தனது ஆத்மார்த்த தந்தையாக நினைத்து அவர் முன்னிலையிலேயே மணமகள் கழுத்தில் தாலிகட்டியும் ஊராரை மெய்சிலிர்த்து வியக்க வைத்திருக்கிறார் காவலர் அன்பரசு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in