`காவல் நிலைய கேமரா பதிவுகள் 18 மாதம் சேமித்து வைக்க வேண்டும்'

டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
`காவல் நிலைய கேமரா பதிவுகள் 18 மாதம் சேமித்து வைக்க வேண்டும்'

தமிழக காவல் நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளை ஒரு ஆண்டு அல்லது 18 மாதங்கள் வரை சேமித்து வைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் வடமதுரையைச் சேர்ந்த சரவணன் பாலகுருசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வடமதுரை காவல் ஆய்வாளர் கருப்பசாமி, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் ராஜகணேஷ், தங்கபாண்டி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், ‘வடமதுரை காவல் நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசு தரப்பில், ‘காவல் நிலைய சிசிடிவி பதிவுகள் 30 நாட்களுக்கு மேல் தானாக அழிந்துவிடும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை 18 மாதங்கள் வரை பாதுகாக்க வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பதிவுகளை குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அல்லது 18 மாதங்கள் வரை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

அதற்கு ஏற்றவாறு 3 மாதங்களில் காவல் நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளை சேமிக்கும் வசதியை உள்துறை செயலரும், டிஜிபியும் ஏற்படுத்த வேண்டும். காவல் நிலையங்களில் சிசிடிவி காட்சிகளை பாதுகாப்பதில் சுணக்கம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in