பள்ளி, கல்லூரி அருகே கஞ்சா வேட்டை நடத்த டிஜிபி உத்தரவு!

'காமதேனு' கட்டுரையால் நடவடிக்கை
பள்ளி, கல்லூரி அருகே கஞ்சா வேட்டை நடத்த டிஜிபி உத்தரவு!

திருச்சி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலையைத் தொடர்ந்து, ‘அச்சுறுத்தும் இளம் குற்றவாளிகள்: என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?' என்ற தலைப்பில் 5.12.2021 தேதியிட்ட 'காமதேனு' வார இதழில் கட்டுரை வெளியாகியிருந்தது. அதில், "பொதுவாக நாம் குற்றவாளிகளை ஒடுக்குவதில் காட்டும் அக்கறையை புதிய குற்றவாளிகள் உருவாகாமல் தடுப்பதில் காட்டுவதில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. அதை மாணவர்களுக்கு விற்கிற வேலையையும் மாணவர்களை வைத்தே செய்கிறார்கள். எனவே, காவல் துறையில் தனித்துறையை ஏற்படுத்தி, பள்ளி, கல்லூரிகளைக் கண்காணித்து இதைத் தடுக்க வேண்டும்" என்று உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இ.பினேகாஸ் வலியுறுத்தியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, காவல் துறையினருக்கு ஒரு சுற்றறிக்கை குறிப்பாணை அனுப்பியுள்ளார்.

அதில், “பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க கஞ்சா மற்றும் லாட்டரி ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் அடைப்பதுடன், தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். கஞ்சா மற்றும் குட்கா கடத்தல், பதுக்கல், விற்பனைச் சங்கிலியை உடைத்து இத்தகைய குற்றச் செயல்கள் தொடராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குக் கவுன்சிலிங் அளித்து இந்தப் பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களைக் கொண்டு, அந்தந்த காவல் ஆய்வாளர்கள் வாட்ஸ் -அப் குழுக்களை உருவாக்கி தகவல் சேகரித்து, போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க வேண்டும். ஆந்திரப் பகுதியில் இருந்து கஞ்சா தமிழ்நாட்டிற்கு கடத்தப்படுவதைத் தடுக்க அம்மாநில போலீஸாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனையை ஒழிப்பதில் உளப்பூர்வமான அக்கறையுடன் காவல் துறையினர் பணியாற்றினால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். சாதிக்குமா காவல் துறை?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in