தலையாட்டி பொம்மைகளை அனுப்பிய தஞ்சை பெண்கள்: பிரதமர் மோடி புகழாரம்

தலையாட்டி பொம்மைகளை அனுப்பிய தஞ்சை பெண்கள்: பிரதமர் மோடி புகழாரம்
தாரகைகள் மகளிர் குழு விற்பனைக் கூடம்

தனக்கு தலையாட்டி பொம்மை அனுப்பி வைத்த தஞ்சை தாரகை மகளிர் சுயஉதவிக் குழு பெண்களுக்குப் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அதன்படி இன்று கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மன் கி பாத் நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

அப்போது, "தஞ்சாவூரில் இருந்து தஞ்சை தாரகை மகளிர் சுயஉதவிக் குழு விற்பனை அங்காடி பெண்கள் எனக்குத் தலையாட்டி பொம்மைகள் அனுப்பியுள்ளனர். இதனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். தலையாட்டி பொம்மை அனுப்பிய சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த அனைத்துப் பெண்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி பாராட்டிப் பேசியதன் மூலம் இந்தியா முழுவதும் தஞ்சை தலையாட்டி பொம்மைகளின் சிறப்பு மற்றும் மகளிர் சுயஉதவிக் குழு பெண்களின் சிறப்பு பரவியது. மேலும் தஞ்சை தாரகை மகளிர் சுயஉதவிக் குழு பெண்களால் தஞ்சைக்கு மட்டுமல்லாது தமிழகத்திற்கும் பெருமை கிடைத்துள்ளது.

இதுகுறித்து தஞ்சை தாரகை மகளிர் சுயஉதவிக் குழு விற்பனை அங்காடியைச் சேர்ந்த மணிமேகலை கூறுகையில், “தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மகளிர் திட்ட அலுவலர் லோகேஸ்வரி மற்றும் அதிகாரிகளின் சீரிய முயற்சியால் தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே தஞ்சை தாரகை மகளிர் சுயஉதவிக் குழு விற்பனை அங்காடி அமைக்கப்பட்டது.

மணிமேகலை
மணிமேகலை

இதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழு தயாரித்த பொருட்களை எளிதாக விற்பனை செய்ய முடிகிறது. எங்களின் வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது. எங்களைப் போன்ற பெண்களுக்கு சுயஉதவிக் குழு மூலம் விடிவுகாலம் பிறந்துள்ளது. மகளிர் சுயஉதவிக் குழு தயாரித்த அனைத்துப் பொருட்களையும் நாங்கள் விற்பனை செய்துவருகிறோம்” என்றார்.

மேலும், “கடந்த ஏப்ரல் மாதம் ஒரு ஜோடி டான்சில் பொம்மை, ஒரு ஜோடி தலையாட்டி பொம்மை ஆகியவற்றை பிரதமர் மோடிக்கு தஞ்சை ஆட்சியர் மூலமாக அனுப்பி இருந்தோம். இன்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாங்கள் அனுப்பி இருந்த தலையாட்டி பொம்மைகள் பற்றி பேசியது பெருமையாக உள்ளது. இனி மற்ற பெண்களும் சுயமாக பொருட்கள் விற்பனை செய்வதற்கு இது உதவியாக இருக்கும். பிரதமர் மோடி பேசியதன் மூலம் மகளிர் சுயஉதவிக் குழு கூடுதலாகப் புத்துயிர் கிடைக்கும். இந்தப் பாராட்டுக்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மகளிர் திட்ட அலுவலர் லோகேஸ்வரி ஆகியோரையே சேரும்" என்று மணிமேகலை கூறினார்.

தங்கள் திறமையை பிரதமர் வரைக்கும் கொண்டுசென்ற தஞ்சை பெண்கள் அடுத்ததாக உலகளாவிய பெருமை பெறுவதற்கு உழைக்கட்டும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in