பிரதமர் மோடி பாராட்டிய நாகநதி: சில தண்ணீர் நினைவுகள்

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

இன்று (செப்.26) ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சில ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓடி, பின்னர் வறண்டுவிட்ட நாகநதி பற்றிப் பேசினார். பெண்களின் பெருமுயற்சியால் அந்நதி மீட்டெடுக்கப்பட்டதைப் பற்றியும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்திருக்கிறார். 21 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரம் பெண்கள் இணைந்து மழை நீர் சேகரிப்பு, தடுப்பணைகள் போன்றவற்றின் மூலம் ஆற்றுக்கு உயிர் கொடுத்ததை அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

நாகநதி என் வாழ்க்கையில் மிகவும் பரிச்சயமானது என்பதால், அதைப் பற்றிய நினைவுகள் என்னுள் துளிர்விட்டன. 46 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்துக்கு அந்த நினைவுகள் என்னை அழைத்துச் சென்றன.

வளைந்து ஓடும் நதி

நாகநதி என்ற சிற்றாறு பழைய வட ஆற்காடு மாவட்டத்தின் முக்கியமான ஆறுகளில் ஒன்று (ஆற்காடு என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டாலும் உள்ளூர்க்காரர்களான எங்களுக்கு அது ஆர்க்காடுதான். அத்திமரக் காடு என்பதால் ஆர்க்காடு (ஆர்த்திக்காடு!) என்று பெயர் வந்தது). அந்நதி எங்கே தோன்றி எங்கே மறைகிறது என்றெல்லாம் சிறுவர்களான எங்களுக்கு அப்போது தெரியாது. அரசு அலுவலரான என் தந்தை திருவண்ணாமலையிலிருந்து கண்ணமங்கலம் என்ற சிற்றூருக்கு மாற்றலாகி வந்தபோது அந்த ஊர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாவது (1971-72), பதினொன்றாவது (1972-73) படித்தேன். அந்த ஊரில் ஆறு இருக்கிறது என்று கேள்விப்பட்டதும் வேலூர், ஆர்க்காட்டில் பார்த்த பாலாறு நினைவுக்கு வர, முதல் நாளே அந்த ஆற்றங்கரைக்குச் சென்று பார்த்தேன். அந்த ஆறு சேர்ந்தார்போல ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குக் கூட நேராக இல்லை. இது தான் ஆறா என்று என் நண்பனிடம் கிண்டலாகவே கேட்டேன். வளைந்து வளைந்து ஓடுவதால்தான் இதற்குப் பெயர் நாகநதி என்றான் தோழன்.

அந்த ஆற்றில் மழைக்காலத்தில் தண்ணீர் வரும். அதைவிட அது பெருமழையின்போது வேகமாகப் பெருக்கெடுக்கும். அகலம் அதிகமில்லை என்பதால் அதில் திரண்டு வரும் தண்ணீர் முழுக்க வெகு வேகமாக ‘ஹோ’வென்ற ஓசையுடன் படுவேகமாக ஓடும். அப்போது அதில் சிக்கும் குடிசைகள், கால்நடைகள், மனிதர்கள், மாட்டு வண்டிகள் என்று எதையும் விட்டுவிடாமல் நீரோட்டம் வெகுதூரம் இழுத்துச் செல்லும். எங்காவது வளைவுகளில் முட்டி மோதி இவையெல்லாம் ஒதுங்கினால்தான் உண்டு.

ஆனால் அந்த ஆறு அப்படியெல்லாம் நாள் கணக்கில் ஓடாது. சில மணி நேரத்துக்கெல்லாம் நீர்த்திரள் அல்லது மழையளவு குறைந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து வடிந்துவிடும். ‘காலையில் பயமெடுக்கவைத்த ஆறா இது?’ என்று வியக்கும் அளவுக்குக் கணுக்காலுக்கும் கீழே அமைதியாக சலசலக்கும். சாதாரணமாக ஓடும்போது அந்த ஆற்று நீரில் கறுப்பாகத் துகள்கள் மிதந்துவரும். தாமிரபரணியைப் போல என்று சொல்லலாம். ஆனால் அவ்வளவு அடர்த்தி இருக்காது. வேலூருக்கு அருகில் உள்ள மலையில் உள்ள கனிமங்கள் அந்த நீரில் சேர்ந்து வருவதாகப் பெரியவர்கள் சொல்வார்கள்.

பிரமிப்பு தந்த நீரோட்டம்

நாகநதி மீது கண்ணமங்கலம் எல்லையில் மிக உயரமாக ஒரு பாலம் கட்டியிருக்கிறார்கள். வேலூர்- திருவண்ணாமலை பேருந்துகள், இதர மோட்டார் வாகனங்கள் அதன் வழியாகத்தான் செல்கின்றன. கண்ணமங்கலத்தில் அன்றைய பழைய பஜார் வீதி அந்த ஆற்றில்தான் போய் முடியும். ஒரு மழைக்காலத்தில் இப்படி பெருவெள்ளம் வந்தபோது ஊரே திரண்டு நின்று வேடிக்கை பார்த்தது. நானும் நண்பர்களும் சென்றபோது அனைவரும் எங்களை எச்சரித்துக்கொண்டே இருந்தார்கள். “தண்ணீதானேன்னு நெனச்சுப் போயிடாத, இழுத்துடும்”என்றார் ஒரு பெரியவர். காவல் துறையைச் சேர்ந்தவர்கள் லத்தியுடன் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்கள். சுமார் எட்டு அல்லது பத்தடி உயரத்துக்குத் தண்ணீர் பெரிய பம்பு செட்டிலிருந்து பாய்வது போல போனது கண்கொள்ளாக் காட்சி. அருகே போக வேண்டும் என்று ஆசை சொன்னாலும் இயற்கையான உயிரச்சம் ஒருவரை ஒருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு அரையடி முன்னே போவதும், ஓரடி பின்னே வருவதுமாக ஐந்தாறு பேர் பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஆற்றில் விழுந்து நெடுக்காகப் போய்க்கொண்டிருந்த ஒரு மரம், தரைப்பாலத்தின் உயரத்தால் அங்கு சற்றே திசை திரும்பி வடக்கு – தெற்காகத் திரும்பியது. அவ்வளவுதான், அத்துடன் ஏராளமான நீரும் நாங்கள் நின்றுகொண்டிருந்த பக்கமாகத் தெறித்து சாலையில் வேகமாக ஏறியது. போலீஸ்காரர்கள் உள்பட அனைவரும் விழுந்தடித்து மேட்டுக்கு ஓடினோம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நின்று அதன் வேகம் படிப்படியாகக் குறைந்ததைப் பார்த்துவிட்டுத்தான் பிரமிப்போடு திரும்பினோம்.

நீர்நிலைகளின் கதி

வேலூரிலேயே ஊருக்கு நடுவில் ஓடும் ஆறுக்குக் கானாறு என்று பெயர். காட்டிலிருந்து வரும் ஆறு கானாறு. ஆனால் அந்த ஆற்றில் ஊர் சாக்கடையைக் கலக்கவிட்டு கானாறு என்றால் முகம் சுளிக்க வைத்துவிட்டார்கள். கூவத்தை சென்னை மாநகர ஆட்சியாளர்கள் நாசமாக்கியதைப்போல.

ஆர்க்காட்டில் பாலாற்றில் ஆண்டுக்கொருமுறை வெள்ளம் வந்து கொண்டிருந்தது. சில வாரங்களுக்கு மட்டுமே தண்ணீர் ஓடும். அப்படி அதிகமாக வரும்போது தானாக உயரும் நீர்மட்டம் அப்படியே அருகில் ஒரு வாய்க்காலில் பாய்ந்து மேற்கிலிருந்து கிழக்காக முப்பந்தொட்டி என்ற ஊர்வரை சென்றது, 1970-கள் வரை. ஆர்க்காட்டில் ஜோதி திரையரங்கம் அருகில் அந்த வாய்க்கால் தொடங்கும். முப்பந்தொட்டிக்கு அடுத்த ஊர் குப்பிடிசாத்தம், (ஆர்க்காடு வீராசாமி ஊர்). இந்த ஆறு போகும் வழியில் உள்ள வீட்டுக்காரர்கள் தங்கள் வீட்டுக் கொல்லைப்புறம் வாய்க்கால் அருகே இருக்கும்படி வீடு கட்டிக்கொள்வார்கள். வாய்க்காலின் இரண்டு புறமும் மா, தென்னந்தோப்புகள்தான் வரிசையாக இருக்கும். அவை மட்டுமின்றி ஏராளமான பழ மரங்களும் அத்தி மரங்களும், செடிகளும் கொடிகளும் வளர்ந்திருக்கும். வரிசையாகத் தோப்புகள்தான் தெரியும். பாலாறில் ஓடும் உயரத்தைவிட அதிகமாக வாய்க்காலில் ஓடும். வீட்டுத் துணிகளைத் துவைக்கவும் பாத்திரம் கழுவவும் வாய்க்காலைப் பயன்படுத்துவார்கள். தோப்புகளுக்குத் தண்ணீர் இறைத்துக்கொள்வார்கள். பிறகு அப்படியே கழனிகளுக்குப் பாயும். ஏராளமான மீன்களும் இருந்ததால் வாய்க்கால் தூய்மையாகவே இருக்கும். சிறுவர்கள் உற்சாகமாகக் குளிப்பார்கள்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு யாரோ புண்ணியவான்கள் ஆர்க்காடு பேருந்து நிலையம் அருகில், வாய்க்காலின் ஆரம்பப் பகுதியில் கடைக்கால் போட்டு கட்டிடம் கட்டி தண்ணீர் மேலே வராமல் வாய்க்காலை அடைத்துவிட்டார்கள். அதை யாரும் கவனிக்கவில்லை. பாலாற்றுக்கு வரும் தண்ணீரைக் கர்நாடகமும் ஆந்திரமும் அடைத்துத் திருப்பிவிட்டதால், பாலாறும் வற்றி வாய்க்காலும் வற்றிவிட்டது என்றே நினைத்திருப்பார்கள்.

நாம் இழந்த நீர் ஏராளம்

பாலாற்றுக்குத் தண்ணீர் கர்நாடகத்தின் வேதமங்கலம் என்ற ஏரி நிரம்பி கோடி வழிவதிலிருந்துதான் கிடைக்கும். பிறகு ஆந்திரத்தில் குப்பம் அருகிலும், குடியாத்தம் அருகிலும் இரண்டு சிறு கிளையாறுகள் அதில் சேர்ந்து, அது அகலமான ஆறாகும். கர்நாடக மாநிலம் வேதமங்கலம் ஏரியின் மதகைத் திறக்கவே முடியாதபடிக்கு ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி அடைத்துவிட்டார்கள் என்பார்கள். அந்த ஆற்றில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கைக் கேட்டு வேலூர் குப்புசாமி ஐயர் என்பவர் வழக்கு போட்டார் - அதுவும் 60 ஆண்டுகளுக்கு முன்னால். இப்போதைப்போல அப்போது மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு, நாம் தமிழர் என்ற எண்ணம் இல்லாததால் சுரத்தில்லாமல் போனது.

நாகநதியைப் போல, வேலூர் கானாறைப் போல, பாலாற்றைப் போல, ஆர்க்காட்டில் பாலாற்று வாய்க்காலைப் போல தமிழர்கள் அலட்சியத்தால் இழந்தவை ஏராளம். தமிழ்நாட்டிலேயே ராஜசிங்க மங்கலம் (ஆர்.எஸ். மங்கலம்) ஏரிக்கு அடுத்து பெரியதாக காவேரிப்பாக்கம் ஏரி இருந்தது.

தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரலாறு காணாத மழை பெய்து செங்கை, சென்னை, திருவள்ளூர் மாவட்ட ஏரிகளால் சென்னையே வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஓர் உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று விசாரித்து அறிக்கை தர வேண்டும் என்று. அந்த மதுரைக் கிளைக்குப் புதிய கட்டிடம் கட்டப்பட்ட இடத்துக்குப் பெயரே உலகனேரி!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in