ஒருபக்கம் ஆபரேசன்... மறுபக்கம் பொதுத் தேர்வு எழுதினார்: ஆம்புலன்ஸில் வந்து நெகிழவைத்த மாணவி

ஒருபக்கம் ஆபரேசன்... மறுபக்கம் பொதுத் தேர்வு எழுதினார்: ஆம்புலன்ஸில் வந்து நெகிழவைத்த மாணவி

அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாணவி ஒருவர், மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வந்து தேர்வு எழுதினார். மாணவியின் இந்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.

தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 28-ம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வை 7,506 பள்ளிகளை சேர்ந்த 3,98,321 மாணவர்கள், 4,38,996 மாணவியர் என மொத்தம், 8,37,317 பேர் எழுதி வருகின்றனர். பொதுத்தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதை தடுப்பதற்காக 3,050 பறக்கும் படைகளும், 1,241 ஸ்டாண்டிங் ஸ்குவார்டு படைகளிலும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடைகிறது. மாணவர்கள் காலை 9.45 மணிக்குள் தேர்வறையில் இருக்க வேண்டும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தேர்வு மையங்களில் காலை 9.45 மணிக்கு முதல் மணி அடிக்கப்பட்டது. அந்த நேரத்தில் தேர்வர்கள் தேர்வறைக்கு வந்தனர். அதைத்தொடர்ந்து 9.55 மணிக்கு 2-வது மணி 2 முறை அடிக்கப்பட்ட உடன், அறை கண்காணிப்பாளர் வினாத்தாள் உறைகளைப் பிரித்தனர். காலை 10 மணிக்கு 3-வது மணி 3 முறை அடிக்கப்பட்டது. அப்போது மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது.

இதனிடையே, அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாணவி ஒருவர் தனது தந்தையின் உதவியுடன் தேர்வு எழுதியது அனைவரையும் நெகிழ வைத்தது. திருப்பூரில் உள்ள கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார் மாணவி ரிதன்யா. இவருக்கு அண்மையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனால் தேர்வு எழுத முடியாமல் பாேய் விடுவோமே என்ற கவலையில் இருந்துள்ளார் மாணவி. இந்நிலையில், பொதுத்தேர்வுக்கு மாணவி தயாரானார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாணவி ரிதன்யா, ஆம்புலன்ஸ் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அழைத்து வரப்பட்டார். தனது தந்தையின் உதவியுடன் தேர்வு அறைக்கு தூக்கிச் செல்லப்பட்ட மாணவி தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்வு தேர்வு எழுதி வருகிறார். மாணவியின் இந்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழவைத்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in