234 தொகுதிகளுக்கும் கால்நடை ஆம்புலன்ஸ் வழங்கும் திட்டம்

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேட்டி
234 தொகுதிகளுக்கும் கால்நடை ஆம்புலன்ஸ் வழங்கும் திட்டம்

"தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் கால்நடை ஆம்புலன்ஸ் வழங்கும் திட்டம் வர உள்ள பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். அதற்கான உத்தரவை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார்" என தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் பல்கலைக்கழக நிதியிலிருந்து கட்டப்பட்ட பண்ணை வளாக கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக மீன்வளம்-மீனவர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் படிப்புகள் இந்தாண்டு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் மாவட்டம் தலைவாசலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக கால்நடை பூங்கா தொடங்கினார். அங்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. அந்த திட்டத்திற்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டிய நிலை உள்பட பல்வேறு குளறுபடிகள் உள்ளன. எனவே தமிழக முதல்வர் அறிவுறுத்தல்படி ஆய்வு மேற்கொண்டு அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோமாரி தடுப்பூசிக்கு இப்போது தட்டுப்பாடில்லை. கடந்த காலத்தில் மத்திய அரசு கோமாரி நோய் தடுப்பூசியை தராமல் இழுத்துக் கொண்டே இருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தந்தார்கள். தற்போது ஒட்டுமொத்தமாக கோமாரி நோய் தடுப்பூசி பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து கோமாரி தடுப்பூசி போடப்படும். கால்நடை உதவி மருத்துவக் காலிப் பணியிடங்கள் நிரப்ப முதல்வர் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை கடற்படையால் பிடிக்க மீனவர்களை மீட்க்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதியும் வெளியுறவுத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு இதற்கான சிக்கலை தீர்ப்பதற்கான நடவடிக்கையை முதல்வர் எடுத்து வருகிறார். வெகு விரைவில் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டுக்கோழி உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் கால்நடை ஆம்புலன்ஸ் வழங்கும் திட்டம் வர உள்ள பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். அதற்கான உத்தரவை முதல்வர் வழங்கியுள்ளார். புதிதாக கால்நடை மருத்துவக் கல்லூரி தொடக்கும் திட்டம் முதல்வர் பரிசீலனையில் உள்ளது. எங்கு கேட்கிறார்களோ அங்கு தொடங்கப்படும்'' என்றார். தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், எம்பிக்கள் ஏ.கே.பி.சின்ராஜ், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், எம்எல்ஏக்கள் பெ.ராமலிங்கம், கு.பொன்னுசாமி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் க.ந.செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in