இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை

தொடர்ந்து 6-வது நாளாக அதிகரிப்பு
இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை

தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று (மார்ச் 27) ஒரு லிட்டர் பெட்ரோல் 47 காசுகள் அதிகரித்து ரூ.104.90 ஆக உள்ளது. டீசல் விலை 53 காசுகள் அதிகரித்து ரூ.95.00 ஆக உள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் பெட்ரோல் ரூ.3.50, டீசல் ரூ.3.57 விலை அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்ததால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என கூறப்பட்டது. ஆனால் 5 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக விலை உயர்வு அமல்படுத்தப்படாமலேயே இருந்தது.

இதன் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் 137 நாட்களாக தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81, டீசல் விலை ரூ.91.88 என ஒரே விலையில் நீடித்துக்கொண்டிருந்தது.

5 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்று, முடிவுகள் வெளியான நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 6 நாட்களுக்கு முன் உயரத் தொடங்கியது. எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மொத்தமாக வாங்கும் நிறுவனங்களுக்கு ரூ.25 வரை டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் சில்லறை விற்பனையிலும் அதே அளவுக்கான விலை உயர்வு வரக்கூடும்.

அதுவரை தினம்தோறும் 50 காசுகள் முதல் ஒரு ரூபாய் வரையிலும் சில்லறை விற்பனையில் விலை ஏற்றம் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்று எண்ணெய் நிறுவன வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்தத் தொடர் விலை உயர்வு காரணமாக சரக்குப் போக்குவரத்து வாடகை உயர்த்தப்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயரக்கூடும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.