`மருத்துவப் படிப்பு தொடர முதல்வர் உதவ வேண்டும்'

முதல்வர் தனிப்பிரிவில் உக்ரைனிலிருந்து வந்த மாணவ, மாணவிகள் மனு
`மருத்துவப் படிப்பு தொடர முதல்வர் உதவ வேண்டும்'
முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்த உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவ, மாணவிகள்

இந்தியாவில் மருத்துவப்படிப்பு தொடர உதவுமாறு உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவ, மாணவிகள் முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்துள்ளனர்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மருத்துவபடிப்புக்காக உக்ரைன் சென்றனர். உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்கி படித்து வந்த நிலையில் ரஷ்யா படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்தது. இதனால் உக்ரைனில் சிக்கி தவித்த இந்திய மாணவர்களை மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதின் பலனாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

இதனால், இந்தியா திரும்பிய மாணவர்களின் மருத்துவப் படிப்பு கேள்வி குறியானது. இந்நிலையில், தாங்கள் மருத்துவப் படிப்பு தொடர வழி செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

தமிழக முதல்வரும் இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் உக்கரைனில் இருந்து வந்த மாணவர் முத்துக்குமார், பியூலா, லாரன்ஸ், பிரின்ஸ், அன்னலட்சுமி, ஹரிபிரியா ஆகியோர் தலைமையில் 22 மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவில் தனி அலுவலர் ராம் பிரதீபனிடம் மனு அளித்தனர்.

அதில், உக்ரைனில் போர் நடைபெற்று வருவதால் மாணவர்கள் அனைவரும் இந்தியா வந்து விட்டதாகவும், இதனால் தங்களின் மருத்துவப்படிப்பு கேள்வி குறியாகிவிட்டது என்றும், எனவே நாங்கள் இந்தியாவிலேயே மருத்துவப்படிப்பு தொடர தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளனர். மனுவை பெற்று கொண்ட முதலமைச்சர் தனி பிரிவு அலுவலர் ராம் பிரதீபன், இது குறித்து முதலமைச்சரிடம் தெரிவித்து உதவிகளை செய்வதாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.