முடிவுக்கு வந்தது 31 ஆண்டுகள் சிறை வாசம்: பேரறிவாளனை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்

முடிவுக்கு வந்தது 31 ஆண்டுகள் சிறை வாசம்: பேரறிவாளனை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பேரறிவாளன் மீது வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கில் அவர்கள் அனைவருக்கும் கீழமை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில் அவர்களில் 9 பேர் 1999-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்கும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்த சூழலில், கடந்த 2014-ம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட நால்வரின் கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதனைத் தொடர்ந்து, தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் சார்பில் 2016-ம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்யப்பட்டது. இந்த வழக்கு நடைபெற்று கொண்டிருந்த போதே தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி பேரறிவாளன் தனி மனுவை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் 7 பேரை விடுதலை செய்யக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு 2018-ம் ஆண்டு கருத்துரு அனுப்பியது. இதனை ஆய்வு செய்த மத்திய அரசு, சிபிஐ வசம் இருக்கும் ஒரு வழக்கில் மாநில அரசு முடிவெடுக்க அதிகாரம் கிடையாது எனக் கூறி அந்த கருத்துருவை நிராகரித்தது. இதையடுத்து, 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எழுவரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில்தான், பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரும் மனு மீது மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து காரசாரமான வாதங்களை முன்வைத்து வந்தன. அப்போது மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் சரமாரியான கேள்விகளை நீதிபதிகளும் எழுப்பியிருந்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு விவாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதனிடையே, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், பேரறிவாளனை விடுதலை செய்துள்ளனர். சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக கூறியுள்ள நீதிபதிகள், ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு என தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in