பிறந்த குழந்தை உயிரிழந்தது; பெற்றோர் உறவினர்கள் போராட்டம்

இறந்த குழந்தையுடன் பெற்றோர் மற்றும் உறவினர்
இறந்த குழந்தையுடன் பெற்றோர் மற்றும் உறவினர்

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த சிசு சில மணி நேரங்களிலேயே உயிரிழந்ததற்கு, செவிலியர்கள் காலதாமதமாக சிகிச்சை அளித்ததே காரணம் என பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா புளியந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாண்டியன் - ரம்யா தம்பதியினர்.  இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில்  2-வது முறையாக கர்ப்பமான ரம்யாவிற்கு நேற்று பிரசவ வலி கண்டது. அதனையடுத்து  உறவினர்கள் அவரை சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை 11 மணியளவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரம்யாவிற்கு அன்று மாலையில்  ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறி, ரம்யாவையும் குழந்தையை மருத்துவமனை பணியிலிருந்த  செவிலியர்கள் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக  தெரிவித்துள்ளனர். 

மயிலாடுதுறையிலிருந்து குழந்தையின் சடலத்தோடு திரும்பியவர்கள், சீர்காழி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் இறங்கினர். செவிலியர்களின் அலட்சியம் மற்றும் தாமத கவனிப்பு காரணமாகவே பிறந்த குழந்தை உயிரிழந்ததாக குற்றம்சாட்டினார்கள். தொடர்ந்து சீர்காழி டிஎஸ்பி லாமேக் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரசவம் நடந்தபோது பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் உரிய விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக அவர்கள்  உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன்பின்னர்  இறந்த குழந்தையின் உடல் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. இச்சம்பவம் சீர்காழி அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in