வடமாநிலங்களுக்கு இணையாக தமிழகத்திலும் ஆணவப்படுகொலைகள்!

தீண்டாமை ஒழிப்பு முன்னணி குற்றச்சாட்டு
கே.சாமுவேல்ராஜ்
கே.சாமுவேல்ராஜ்

தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக போராடி வரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜிடம், கோல்குநாத் கொலை வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து கேட்டோம்.

அவர் கூறுகையில், ‘ பாதிக்கப்பட்டவருக்கு சட்டப்படி நீதியைப் பெற்றுத்தருவது அரசு மற்றும் நீதிமன்றத்தின் கடமை. ஆனால், கோகுல்ராஜ் கொலையில், பாதிக்கப்பட்ட குடும்பம் நீதியைப் பெற போராட்டத்தை நடத்தியுள்ளது. இவ்வழக்கில் சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடியது. இதன் காரணமாகத்தான் ப.பா.மோகன் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். நாமக்கல்லில் இந்த வழக்கை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது, மதுரைக்கு இவ்வழக்கை மாற்றி நல்ல தீர்ப்பை வாதாடி பெற்றுத் தந்துள்ளார்’ என்று கூறினார்.

‘தமிழகத்தில் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை வழக்குகளின் நிலை எப்படியிருக்கிறது?’ என்று அவரிடம் கேட்டபோது, ‘தமிழகத்தில் ஏராளமான எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. அவற்றிற்கும் சிறப்பு வழக்கறிஞர்களை நியமிப்பதன் மூலம் தான், ஆணவப் படுகொலை செய்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த முடியும். எனவே, தமிழகம் முழுவதும் உள்ள எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை வழக்குகளுக்கு, குறிப்பாக ஆணவப் படுகொலை வழக்குகளுக்கு அரசே சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும். ஏனெனில், கோகுல்ராஜ் வழக்கில், சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டதால் தான், விரைந்து தீர்ப்பு பெற முடிந்தது’ என்று கூறினார்.

‘தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் தொடர்கிறதா?’ என்ற கேள்விக்கு, ‘ வடமாநிலங்களுக்கு இணையாக ஆண்டுக்கு சராசரியாக 25 ஆணவப் படுகொலைகள் தமிழகத்தில் நடக்கின்றன. சமீபத்தில் கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சியில் ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன.

இக்கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி போராடி வருகிறோம். இச்சட்டம் நிறைவேற்ற வேண்டும் என கடந்த 2015-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அ.சவுந்தரராசன், தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார். ஆனால், அன்றைய தினம், தமிழகத்தில் ஆணவப் படுகொலையே நடக்கவில்லை என்று சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் சொன்னார். ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று திமுக தற்போது சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. அதன்படி சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்’ என்று அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in