
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, வாக்குரிமையுள்ள தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு, வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது.
இந்தத் தேர்தலையொட்டி வேட்பாளர்களும், கட்சித் தலைவர்களும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் வேட்பாளர்களுக்கு பரப்புரை நேரத்தை அதிகப்படுத்தி தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு தமிழக அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு அன்று, வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு முழுமையான விடுப்பு தர வேண்டும். வாக்குப்பதிவு அன்று விடுப்பெடுக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளப் பிடித்தம், சம்பளக் குறைப்பு செய்யக்கூடாது. இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தமிழக அரசு தெரிவித்துள்ளது.