
இசையமைப்பாளர் இளையராஜா குறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் பெரியாரின் பேரனுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியது பெரும் சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது. சாதிய மனநிலையில் இளையராஜாவை அவர் ஒருமையில் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்நிலையில், அவரது பேச்சுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் ’மோடியும் அம்பேத்கரும்’ எனும் புத்தகத்துக்கு இளையராஜா எழுதிய முன்னுரை பெரும் சர்ச்சையானது. மோடி அரசு கொண்டுவந்த முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும், அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் என்றும் இளையராஜா அந்த முன்னுரையில் எழுதியிருந்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதல் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வரை பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர். மறுபுறம் திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள், இடதுசாரிகள் இதுகுறித்த தங்கள் வாதங்களை முன்வைத்து இளையராஜாவை விமர்சித்தனர். கூடவே, சமூகவலைதளங்களில் பலர் இளையராஜாவைத் தரக்குறைவான வார்த்தைகளில் அவதூறு செய்தனர்.
இந்தச் சூழலில், ஈரோட்டில் நடந்த திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், “வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வதும், பணமும் புகழும் வந்தபிறகு தன்னை உயர் சாதி என நினைத்துக்கொள்வதும் என்ன நியாயம்?” என்று பேசத் தொடங்கி இளையராஜாவைத் தரக்குறைவாக விமர்சித்தார்.
அவரது பேச்சைப் பலரும் கண்டித்திருக்கும் நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித், ‘பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக கொள்கிறார்களே' என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி.வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது’ என சமூகவலைதளப் பக்கங்களில் பதிவுசெய்திருக்கிறார்.