ஆன்லைன் ரம்மிக்கு வருகிறது தடை?- ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழுவை அமைத்தார் முதல்வர்!

ஆன்லைன் ரம்மிக்கு வருகிறது தடை?- ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழுவை அமைத்தார் முதல்வர்!

ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்து அவசரச் சட்டம் இயற்ற ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நவீன உலகில் செல்போன்களின் பயன்பாடு இன்றியமையாதது. ஆன்லைனிலேயே டிக்கெட் புக்செய்வது, மளிகை வாங்குவது, சினிமா பார்ப்பது, கேம் விளையாடுவது என அனைத்து வசதிகளும் ஸ்மார்ட் போன்களில் வந்துவிட்டது. அனைத்துத் தரப்பினரிடையேயும் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்த நிலையில் அதனால் ஏற்படும் ஆபத்துகளும் அதிகரித்துள்ளது. சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையான நிலையைக் கண்கூடாக நாம் பார்த்து வருகிறோம். இந்நிலையில் பப்ஜி, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளால் மன உளைச்சலும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. குடும்ப வன்முறைகளுக்கும் செல்போன்கள் அடிப்படை காரணமாக அமைந்து விடுகிறது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடுக்கும் விதமாகக் கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி சில நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, நீதிமன்றம் அந்த அவசரச் சட்டத்தை ரத்து செய்தது. போதிய காரணங்கள், ஆதாரங்களின்றி சட்டம் பிறப்பிக்கப்பட்டதாகவும், அறிவியல் பூர்வமான தரவுகளை விளக்க அரசு தவறிவிட்டதாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் அந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு எடுத்தும் கொள்ளப்படவில்லை. இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டால் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நேற்று முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரியத் தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.

இதில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கொடுக்கும் அறிக்கையின் கீழ் ஆன்லைன் ரம்மி தடைசட்டம் இயற்றப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in