கோயில் திருவிழாவில் வெடி விபத்து; 5 பேர் பேர் காயம், ஒருவர் உயிரிழப்பு!

மாதிரி படம்
மாதிரி படம்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வெடிகள்  வெடித்ததில்  இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயமடைந்தனர்.

பாலக்கோடு வட்டம் வேளாவள்ளி அடுத்த கருப்பா கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன் (27). இவர்  காரிமங்கலம் வட்டம் மொரசுப்பட்டியில் உள்ள தங்கள் குலதெய்வ கோயிலில் நடைபெறும்  திருவிழாவை முன்னிட்டு  தங்கள்  உறவினர்களுடன்  நேற்று இரவு சிறிய சரக்கு வாகனம் ஒன்றில் மொரசுப்பட்டிக்கு புறப்பட்டனர்.

இந்த வாகனத்தில் திருவிழாவுக்கு பயன்படுத்த வாங்கி வைக்கப்பட்டிருந்த வெடிகள் அடங்கிய மூட்டைகள் இருந்தன. பேளாரஅள்ளி விநாயகர் கோவில் பகுதியில் வாகனத்தை நிறுத்தி வெடி வெடித்துள்ளனர். அப்பொது எதிர்பாராத விதமாக சரக்கு வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகள் அடங்கிய மூட்டைகள் மீது தீப்பொறி பட்டது. இதனால் அந்த வாகனத்தில் இருந்த வெடிகள் பெரும் சத்தத்துடன் நாலாபுறமும்  வெடித்துச் சிதறியது. 

இந்த விபத்தில் கருப்பா கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் மகன் விஜயகுமார் (21), சுப்ரமணி மகன் பரசுராமன் (27). கார்த்திக் மகள் பிரதக்சனா (6), அழகேசன் மகன் தர்ஷன் (5), திருப்பதி மகள் யாஷிகா (6), முனுசாமி மகன் நாகராஜ் ஆகிய 6 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தருமபுரியில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டவர்களில் விஜயகுமார் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த சிறுமி யாஷிகா மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து பாலக்கோடு காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடிகள் வெடித்து  ஒருவர் உயிரிழந்து 5 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in