மீனவர்களில் வங்கிக் கணக்கில் ரூ.5,000... தடைக்காலம் தொடங்கும் நிலையில் நிவாரணம்!

மீனவர்களில் வங்கிக் கணக்கில் ரூ.5,000... தடைக்காலம் தொடங்கும் நிலையில் நிவாரணம்!

மீன்பிடித் தடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் ஏப்ரல் 15 ம் தேதி முதல் மீனவர்களின் வங்கி கணக்கில் ரூபாய் 5000 வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா கடலில் தற்போது மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம். எனவே இப்போது மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்தால் மீன் வளம் வெகுவாக குறைந்து விடும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாட்களில் மீன் பிடித்தடைக் காலம்  அமல்படுத்தப்படுவது வழக்கம். முதலில் 45 நாட்களுக்கு தடைக்காலம் அமலில் இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இது 61 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் 15 ம் தேதி தொடங்கி ஜூன் 14 ம் தேதி வரை 61 நாட்களுக்கு கன்னியாகுமரி தொடங்கி திருவள்ளூர் வரையிலான  கிழக்கு கடற்கரை பகுதிகளில் விசைப்படகுகள்  மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை பராமரிப்பு செய்வது, வலைகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.

மீன்பிடி தடைக் காலத்தின்போது மீன்பிடித் தொழில் முற்றிலுமாக தடைப்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, மீனவர் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி தடைக் காலம் தொடங்க உள்ள நிலையில் மீனவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அவர்களின் வங்கிக் கணக்கில் இம்மாதம் 15 ம் தேதி முதல் வரவு வைக்கப்படும் என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இந்த திட்டம் பாதிக்கப்படாது என்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in