சொத்துவரி கட்டாத 200 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்

பள்ளியை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் உள்ளாட்சி நிர்வாகம்
சொத்துவரி கட்டாத 200 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் சொத்துவரி கட்டாத 200க்கும் மேற்பட்ட பள்ளிகளை சீல் வைக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

சென்னை, தாம்பரம் மாநகராட்சி, தூத்துக்குடி மாநகராட்சி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு சொத்துவரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளி நிர்வாகிகள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் கரோனா பாதிப்பால் தங்கள் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் உள்ளாட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையால் தனியார் பள்ளி நிர்வாகம் செய்வதறியாது திகைத்து நிற்கின்றது. பள்ளியை ஜப்தி செய்வதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 20 ஆயிரம் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு சொத்துவரி வசூல் செய்யாமல் இருந்த நிலையில் தனியார் பள்ளிகளும் சொத்துவரி கட்ட வேண்டும் என அரசு உத்தரவிட்டது. தற்போது உள்ளாட்சி அமைப்புகள் தனியார் பள்ளிகளுக்கான சொத்துவரியை கட்ட வேண்டும் என பள்ளிகளின் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி வருகிறது. மேலும் சொத்துவரி கட்டாத பள்ளியின் நிர்வாகிகளை சொத்துவரிக் கட்டச்சொல்லியும், சொத்து வரி கட்டாத பள்ளிகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சொத்துவரி கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன், மேல்நிலை பள்ளி சங்கங்களின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் 2 ஆண்டுகளாக பெற்றாேர்கள் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை செலுத்தாமல் உள்ள நிலையில், உள்ளாட்சித்துறையின் நடவடிக்கை பெரும் பயத்தையும், அச்சத்தையும் அளிப்பதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சொத்துவரி கட்டுவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

தனியார் பள்ளிகள் சொத்துவரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ள நிலையில் உள்ளாட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in