சாலைகள் சரியில்லை... நானே நேரில் ஆய்வு செய்யப்போகிறேன்! முதல்வரின் பருவ மழை எச்சரிக்கை!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

"பல்வேறு மாவட்டங்களிலும், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களும், அரசு செயலாளர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். நானும் இதனை கள ஆய்வு செய்தும், பணி முன்னேற்றம் கூட்டங்கள் நடத்தியும் உறுதி செய்ய திட்டமிட்டிருக்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர், "கடந்த ஆண்டுகளில், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட புயல், கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிந்து, பேரிடர்களின் சேதத்தை குறைப்பதற்கும், பாதிப்புகளை தவிர்ப்பதற்கும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நீர்வள ஆதாரத்துறை ஆகிய துறைகளுக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 716 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாக 4399 ஆக இருந்த பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 3770 ஆக குறைந்துள்ளன.

ஆலோசனையில் பங்கேற்ற அதிகாரிகள்
ஆலோசனையில் பங்கேற்ற அதிகாரிகள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வலுப்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், நிவாரண மையங்களும் கண்டறியப்பட்டு, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நிவாரண முகாம்களில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்திட வேண்டும்.

பருவமழைக் காலத்தில், நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கவும், நோய்த் தொற்று பரவலைத் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்வதோடு, நோயுற்ற மக்களுக்கு சிகிச்சை வழங்கும் பொருட்டு, உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பாம்பு கடிக்கான மாற்று மருத்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், மழைநீர் வடிகால் பணிகளையும், மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

முதல்வர் தலைமையில் ஆலோசனை
முதல்வர் தலைமையில் ஆலோசனை

சென்னை, புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று எனக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதோடு, சிறு விபத்துக்கள் ஏற்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இது ஏற்புடையதல்ல. இதனை வெறும் அறிவுரையாக மட்டும் நான் கூறவில்லை.

அமைச்சர் பெரு மக்களும், அரசு செயலாளர்களும், தலைவர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். நானும் இதனை கள ஆய்வு செய்தும், பணி முன்னேற்றம் கூட்டங்கள் நடத்தியும் உறுதி செய்ய திட்டமிட்டிருக்கிறேன். இந்த வாரத்தில் சென்னையில் ஆய்வு நடத்தவுள்ளேன். இனி சுற்றுப்பயணம் செய்ய அனைத்து மாவட்டங்களிலும், இது தொடர்பாக நேரடியாக நான் ஆய்வு செய்ய முடிவு செய்திருக்கிறேன்.

ஆலோசனையில் பங்கேற்ற அதிகாரிகள்
ஆலோசனையில் பங்கேற்ற அதிகாரிகள்

சாலைப்பணிகள் மேற்கொள்ளும் துறைகள் அனைத்தும் துரிதமாக, தரமாக பணிகளை மேற்கொண்டு முடிக்க வேண்டும் என்பதை கண்டிப்போடு தெரிவித்துக் கொள்கிறேன். ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு, புயல், கனமழை மற்றும் காற்றின் வேகம் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களைத் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் உட னுக்குடன் அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வடகிழக்குப் பருவ மழையின் போது, பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பேரிடர்களின் போது மனித உயிரிழப்புகள் ஏற்படுவதையும், பொதுச் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்படுவதையும் தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in