இனி 5 வயது வரை அரசு பேருந்தில் கட்டணமில்லை: அமைச்சர் அசத்தல் அறிவிப்பு!

இனி 5 வயது வரை அரசு பேருந்தில் கட்டணமில்லை: அமைச்சர் அசத்தல் அறிவிப்பு!

அரசுப் பேருந்துகளில் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்குக் கட்டணம் இல்லை என்ற நடைமுறை தமிழகத்திலிருந்து வந்தது. இனி ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இது பெண்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று வந்தது. மானியக் கோரிக்கையின் போது போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் போக்குவரத்துத் துறையில் பத்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

மே 12-ம் தேதி போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை நடைபெறும். மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வதைத் தடுக்கும் வகையில் அனைத்துப் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் புற்று நோயாளிகள், சலுகை விலை டிக்கெட்டுகளை இனி இணையதளத்தின் வாயிலாகப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து வகைப் பேருந்துகளிலும் இனி கட்டணமில்லாமல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணம் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார். தற்போதுவரை 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களாகவே பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் பேருந்து கட்டணம் உயர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் தமிழக மக்கள் இருந்து வந்தனர். கோடையில் பெய்யும் மழை போலப் பேருந்து கட்டணம் குறைப்பு மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.