வடவர்களுக்கு வாய்ப்பாக ‘கேட்’டை போடும் என்எல்சி!

திக தலைவர் கி.வீரமணி கண்டனம்
வடவர்களுக்கு வாய்ப்பாக  ‘கேட்’டை  போடும் என்எல்சி!

திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பணிகளில் தமிழர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி உள்ளது. Graduate Engineering Training(GET) என்ற பணிக்கு 300 பணியிடங்களுக்கான அறிவிக்கை கடந்த 26-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் பட்டதாரிகளுக்கான இப்பணிக்கு விண்ணப்பிக்க Gate 2022 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ‘கேட்’ தேர்வுகள் எம்.டெக் போன்ற மேற்படிப்புக்காக எழுதப்படுபவை. மேற்படிப்பு எண்ணம் இல்லாதவர்கள் கேட் தேர்வு எழுதுவது இல்லை. ஆனால் இப்பணிக்கான அடிப்படை தகுதியாக வைக்கப்படுமேயானால், முன்கூட்டியே அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். கடந்த ஆண்டுகளில் அவ்வாறே விளம்பரங்கள் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளன. அதற்கேற்ப விண்ணப்பிக்க விரும்புவோர் ‘கேட்’ எழுதி, தயாராக இருப்பார்கள். தற்போதும் அத்தகைய விளம்பரங்களை முன்கூட்டியே வெளியிட்டு கோல் இந்தியா, இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்கள் தங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரை ‘கேட்’ தேர்வுக்கு தயார்படுத்த செய்கின்றன.

இந்நிலையில் 2020-ம் ஆண்டுக்கான' கேட்' தேர்வு இல்லாமல், என்எல்சி நிர்வாகம் நடத்திய தேர்வு மூலமே பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2022-ம் ஆண்டுக்கான 'கேட்' தேர்வின் அடிப்படையில் பணியாளர்கள் எடுக்கப்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டிருந்தால், என்எல்சி சார்பில் முன்கூட்டியே ‘கேட்’டுக்கு தயார்படுத்த கூறும் விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கும் வேண்டும். ஆனால் வெளியாகவில்லை.

கடந்த ‘கேட்’ தேர்வு 2021-ல் முடிந்து அதன் தேர்வு முடிவுகள் டிசம்பர் இறுதியில் வெளியாகிவிட்டன. ஆனால், "கேட் தேர்வு அடிப்படையிலேயே பணியிடம் நிரப்பப்படும்; ஏப்ரல் 11-ம் தேதியே விண்ணப்பிக்க இறுதி நாள்” என்று இப்போதைக்கு 'கேட்' தேர்வு எழுத முடியாத சூழலில் அறிவித்திருப்பது வாய்ப்பை மறுக்கும் அடாத செயலாகும். ஒன்று முந்தைய முறையை பின்பற்றி கேட் தேர்வு இல்லாமல், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனி தேர்வு நடத்தி பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அல்லது 'கேட்' தேர்வு கட்டாயம் என்பதை அறிவித்து விட்டு, எழுதுவதற்கான வாய்ப்பு அமைந்த பின், அதன் அடிப்படையில் பணி நியமனத்திற்கான நேர்காணலை நடத்த வேண்டும்.

வடவர்களுக்கு மட்டும் பயன்படும் வாய்ப்பாக இப்படி திடீரென ஒரு ‘கேட்’டை போடுவது கண்டனத்துக்குரியது. என்எல்சி நிர்வாகம் உடனடியாக இந்த விளம்பரத்தை திரும்ப பெற்று நியாயமாக அனைவரும் விண்ணப்பிக்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்” என்று அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in