`2010க்கு முன்பு 80%, 2020-ல் 5%, இப்போது 300 பேர்'- தமிழர்களுக்கு என்.எல்.சி நிர்வாகம் அநீதி

`2010க்கு முன்பு 80%, 2020-ல் 5%, இப்போது 300 பேர்'- தமிழர்களுக்கு என்.எல்.சி நிர்வாகம் அநீதி

"2010க்கு முன்பாக தேர்வுப் பட்டியலில் 80% பேர் வரை தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இடம் பெற்றதுண்டு. 2020-ல் 5%க்கும் கீழே போய்விட்டது. இப்பொழுது வரவுள்ள 300 பேர் கொண்ட தேர்வுப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஒருவராவது இடம் பெறுவாரா?" என என்.எல்.சி-க்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெய்வேலி அனல் மின் நிறுவனத்தில் பட்டதாரி நிர்வாக பயில்நகர் பதவிக்கான 300 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை (எண்02-2022) என்.எல்.சி வெளியிட்டு இருந்தது. ஏற்கெனவே 2020-ல் இதே பதவிக்கான பணி நியமனங்கள் நடைபெற்றன. ஆனால், 2022-ல் தேர்வு முறைமையில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. GATE-2022 மதிப்பெண் அடிப்படையில் தேர்வு பட்டியல் அமையும் என்று அறிவிக்கப்பட்டது.

GATE-2022 தேர்வுகள் தகுதியாக நிர்ணயிக்கப்படும் என்று தெரிந்திருந்தால் பலர் தயார் ஆகி இருப்பார்கள். ஆனால், அதற்கான அவகாசம் தரப்படவில்லை. அறிவிக்கை மிக மிக நெருக்கு வெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே, GATE-2022 எழுதாதவர்கள் தேர்வு முறைமைக்கு வெளியே நிறுத்தப்பட்டு விட்டனர். இது அநீதியானது. சமவாய்ப்பை மறுப்பது.

இன்னொரு முக்கிய விஷயம், ஏற்கெனவே தேர்வுப் பட்டியலின உள்ளடக்கம் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் கேள்விக் குறியாகி இருக்கிறது. 2010க்கு முன்பாக தேர்வுப் பட்டியலில் 80 சதவீதம் பேர் வரை கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இடம் பெற்றதுண்டு. 2022-ல் 5 சதவீதத்துக்கும் கீழே இந்த விகிதம் போய்விட்டது.

இந்த தேர்வுப் பட்டியல் வெளிவந்தால் பேரதிர்ச்சியை தரக்கூடும். 300 பேர் கொண்ட தேர்வுப் பட்டியலில் ஒரு தமிழராவது இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நான் இன்று என்எல்சி தலைவர் ராகேஷ் குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அறிவிக்கை எண் 02-2022ஐ ரத்து செய்ய வேண்டும். தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டாம். மீண்டும் முந்தைய முறைமையின் அடிப்படையில் தேர்வை நடத்த வேண்டும். குறிப்பிட்ட சதவீதம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு தரப்பட வேண்டும் என கோரியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.