நேற்றிலிருந்து இரவுநேர ஊரடங்கு

சென்னையில் 547 வாகனங்கள் பறிமுதல்
நேற்றிலிருந்து இரவுநேர ஊரடங்கு
தி இந்து

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட இரவுநேர ஊரடங்கு நேற்று இரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இரவில் தேவையின்றி வெளியே வந்த மக்கள், போலீஸாரால் எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. அதன்படி இரவுநேர ஊரடங்கு நேற்று இரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இரவு 9 மணி முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கடைகளை வியாபாரிகளே மூடத் தொடங்கினர்.

இரவு 10 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு என்பதால், காவல் துறையினர் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சென்னையில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 10 ஆயிரம் போலீஸார் கண்காணித்தனர். முதல்நாள் என்பதால், சிலர் இரவு 10 மணிக்குப் பிறகும் வாகனங்களில் பயணிப்பதைக் காணமுடிந்தது. அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து, மக்கள் வெளியே சுற்ற வேண்டாம் என காவல் துறையினர் ஆங்காங்கே மக்களிடம் அறிவுறுத்தினர்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து பயணிகளின் தேவைக்காக தடையின்றி பேருந்துகள் இயக்கப்பட்டன. முகக்கவசம் அணிந்தோர், தடுப்பூசி செலுத்தியோர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆவடி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இரவில் வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

அத்தியாவசிய பணி மற்றும் மருத்துவ உதவிக்காக செல்வோர், அதற்குரிய ஆவணங்களை எடுத்துச் சென்றால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இரவுநேர ஊரடங்கால் பெரும்பாலான இடங்களில் சாலைகள் வெறிச்சோடியே காணப்பட்டன. இருப்பினும், சென்னையில் இரவில் சுற்றியதாக 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் காவல் துறையினர் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று பத்து மணிக்கு முன்னதாகவே கடைகளை மூடுமாறு கேட்டுக்கொண்டனர். முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களையும் அறிவுறுத்தினர்.

பெரும்பான்மையாக மக்களின் முழு ஒத்துழைப்போடு நேற்றைய இரவுநேர ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, காலை 5 மணிக்குப் பிறகு வாகனங்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in