வாவ்... என்ன அழகு!... அன்னநடை போட்டு அசத்திய 55 வகையான நாய்கள்

கண்காட்சியில் தங்கள் நாய்களுடன் பங்கேற்றவர்கள்
கண்காட்சியில் தங்கள் நாய்களுடன் பங்கேற்றவர்கள்

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சியில் 55 வகைகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன.

தன் செல்ல நாயுடுடன் சிறுமி.
தன் செல்ல நாயுடுடன் சிறுமி.

மதுரை தமுக்கம் மைதானத்தில் தேசிய அளவிலான 37வது நாய்கள் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பங்கேற்க ஆன்லைன் முறையில்  பதிவு நடந்தது. 

தமிழகம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து  சௌசௌ, சிச்சு, தாய் பொமேரியன், டூடுல், ஜெயின் பெர்னாட், ஆப்கான் ஹண்ட், ஜெர்மன் செப்பர்ட், டாபர் மேன்,கிரேடேன்,ராட் மாஸ்டிஸ், பாக்சர், ஜிவாவா, மால்டிஸ், சைபீரியன் அஸ்கி, ஸ்பேனியல் உள்ளிட்ட 55 வகையான  வெளிநாட்டு இன நாய்கள் கலந்து கொண்டன.

அதேபோல ராமநாதபுரம் மந்தை, ராஜபாளையம், சிப்பிப்பாறை, கண்ணி,கோம்பை உள்ளிட்ட 10 வகையான நாட்டின நாய்களும் இதில் கலந்து கொண்டன.

கண்காட்சியில் பங்கேற்ற நாய்களில் சிறந்த நாய்களைத் தேர்வு செய்ய ஜப்பான் நாட்டில் இருந்து மூன்று பேர் அடங்கிய நடுவர்கள் வந்திருந்தனர்.

நாயுடன் போட்டியில் கலந்து கொண்டவர்.
நாயுடன் போட்டியில் கலந்து கொண்டவர்.

நாய்களின் உடல் கட்டமைப்பு , கட்டளைக்கு கீழ்படிதல், நடை, ஓட்டம், தோற்றம்,உடல் தகுதி, வயதுக்கேற்ப வளர்ச்சி, நிறம் மற்றும் பராமரிப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு இனங்களிலும் சிறந்த நாய்களுக்கு பரிசுக் கோப்பையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.

பார்ப்பதற்கு அச்சு அசல் பொம்மைகள் போன்று காணப்பட்ட சௌசௌ, சிச்சு, பொமேரியன் போன்ற நாய்கள் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தன. இந்த வகை நாய்களை சிகை அலங்கார நிபுணர்களை கொண்டு அதன் உரிமையாளர்கள் குழந்தைகளை போல வகை வகையான ஹேர்ஸ்டைல்களில் வண்ண வண்ண கிளிப்கள் அணிந்து அழைத்து வந்திருந்தனர். 

அழகு மிளிரும் சிகை அலங்காரத்துடன் பங்கேற்ற நாய்.
அழகு மிளிரும் சிகை அலங்காரத்துடன் பங்கேற்ற நாய்.

இதில் சில வகையான நாய்கள் பார்ப்பதற்குப் பூனைக்குட்டிகள் போலவும், சில நாய்கள் பார்ப்போரை மிரளும் வகையில் 4 அடிவரை வளர்ந்து பிரம்மாண்ட தோற்றத்துடனும் காணப்பட்டன. போட்டியில் ஒவ்வொரு நாயும் அன்னநடை போட்டு நடந்து சென்றவிதம் பார்வையாளர்களை ரசிக்க வைத்தன. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in