`தண்ணீர் திறப்பில் கவனம் வேண்டும்'- கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கறார் அறிவுரை

`தண்ணீர் திறப்பில் கவனம் வேண்டும்'- கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கறார் அறிவுரை

போதிய முன்னறிவிப்பு இல்லாமல் மக்கள் எதிர்பாராத நேரத்தில் நீர்நிலைகளிலிருந்து வெளியேறும் தண்ணீரின் அளவை அதிகரிக்க கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று சுமார் ஒரு லட்சம் கன அடி அளவிற்குக் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து இன்று 2.10 லட்சம் கன அடி அளவிற்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுவதால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், 14 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `போதிய முன்னறிவிப்பு இல்லாமல் மக்கள் எதிர்பாராத நேரத்தில் நீர் நிலைகளிலிருந்து வெளியேறும் தண்ணீரின் அளவை அதிகரிக்க கூடாது. அனைத்து நிலை அலுவலர்களும் கரையோர பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தரமான உணவு, குடிநீர், குழந்தைகளுக்கு பால், ரொட்டி போன்றவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின்றன எனச் செய்திகள் வருகின்றன. எனவே அவற்றை முறையாக பாதுகாக்க வேண்டும்” என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in