காவல்துறைக்கான ஜனாதிபதியின் சிறப்பு கொடி: வெங்கையா நாயுடுவிடமிருந்து பெற்றுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்!

காவல்துறைக்கான ஜனாதிபதியின் சிறப்பு கொடி: வெங்கையா நாயுடுவிடமிருந்து பெற்றுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழகக் காவல்துறைக்கு வழங்கப்பட்ட குடியரசுத் தலைவரின் சிறப்பு கொடியை வெங்கையா நாயுடு, மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்.

இந்தியாவின் முதல் காவல் துறை, 1856-ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் உருவாக்கப்பட்டது. இந்தியக் காவல் துறையின் முன்னோடி எனப் பெயர் பெற்ற தமிழக காவல் துறையில், முதல் கைரேகை பிரிவு, தடய அறிவியல் பிரிவுகள், வயர்லெஸ் அமைப்பு, கடலோர காவல் படை எனப் பல பிரிவுகள் முதன்முறையாகத் தொடங்கப்பட்டன. இப்படி பல பெருமைகளைக் கொண்ட தமிழக காவல் துறைக்கு ஜனாதிபதியின் சிறப்புக் கொடியை வழங்கவேண்டும் எனக் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து அப்போதைய காங்கிரஸ் அரசு, 2009-ல் அதற்கான ஆணையைத் தமிழக காவல் துறையின் 150-வது ஆண்டு விழாவையொட்டி பிறப்பித்தது. ஆனால், சில நிர்வாக காரணங்களால் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. 13 வருடங்கள் கழிந்த நிலையில் குடியரசு தலைவரின் சிறப்புக் கொடி தமிழக அரசிற்கு இன்று வழங்கப்பட்டது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்குத் தமிழகக் காவல்துறை சார்பில் சிறப்பு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட வெங்கையா நாயுடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் குடியரசுத் தலைவர் கொடியை வழங்கினார். வெங்கையா நாயுடுவிடமிருந்து கொடியைப் பெற்ற ஸ்டாலின் டிஜபி சைலேந்திர பாபுவிடம் ஒப்படைத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in