ஈரமான சிந்துவின் கண்கள்... முதல்வர் முன் நடந்து காட்டினார்: அரசு மருத்துவமனையில் நடந்த நெகிழ்ச்சி

சிந்துவிற்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
சிந்துவிற்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

கால்கள் முறிந்த நிலையில் 12ம் வகுப்புத் தேர்வை எதிர்கொண்ட வாலிபால் வீராங்கனை சிந்துவை முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபால் வீராங்கனை சிந்து. 12-ம் வகுப்பு மாணவியான இவர் கடந்த ஆண்டு வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்தார். இதில் அவரின் இரண்டு கால் எலும்புகளும் முறிந்தன. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிந்துவிற்கு பத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே படுத்த படுக்கையாக மாணவி சிந்து தனது வாழ்க்கை போராட்டத்தை நடத்தி வந்துள்ளார். ஓடி ஆடிய கால்கள் ஓய்ந்துவிட்டதை நினைக்கும் போதெல்லாம் அவரின் நெஞ்சம் பதைபதைப்பதைக் கண்டு பெற்றோர் ஆறுதல் சொல்லாத நாட்களே இல்லை எனலாம். கால்கள் முறிந்த மனவேதனை ஒருபுறம் என்றால் படுத்த நிலையிலேயே 12-ம் வகுப்புத் தேர்வுக்குத் தயாராக வேண்டிய சூழல் அவரை வாட்டியெடுத்தது. ‘கால்கள் சீக்கிரம் சரியாகிவிடும். திரும்ப பழையபடி விளையாடலாம்’ என மருத்துவர்களும் குடும்பத்தினரும் அவரை தேற்றிவந்தனர். இதனால் மனம் தளராத சிந்து புதிய உத்வேகத்துடன் தேர்வுக்குத் தயாரானார்.

இந்த நிலையில் மே 5-ம் தேதி மருத்துவ உபகரணங்களோடு தேர்வறைக்கு வந்து படுத்த படுக்கையிலேயே சிந்து தேர்வெழுதியது காண்போரை நெக்குருக வைத்தது. “எங்க அப்பா டீ விற்கிறார். அம்மா வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்கிறார். எங்களுக்கு வேறு வருமானம் கிடையாது. திரும்பவும் வாலிபால் விளையாட வேண்டும் என ஆசையாக இருக்கிறது. கால்கள் சரியாகுமா எனத் தெரியவில்லை. கால்கள் சரியானால் மீண்டும் விளையாடப் போவேன்” எனக் கூறியிருந்தார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், “ மீண்டும் வாலிபால் விளையாட வேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளைத் தமிழக அரசே ஏற்கும்” என ட்விட் செய்திருந்தார். அவரின் ட்விட்டர் பதிவில், “வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம். கடுமையான நெருக்கடிகளின்போதுதான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும். விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வம் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையைச் சிந்துவைப் போல மாணவர்கள் தேர்வுகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்“ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிந்துவை, நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின். அப்போது முதல்வரை நேரில் கண்ட சிந்துவின் கண்கள் ஈரமாகின. தனது கால்கள் நடக்கத் தயாராகிவிட்டதை முதல்வருக்குத் தெரிவிக்கும் வகையில் வலியைப் பொருட்படுத்தாமல், சிறிது தூரம் நடந்து காட்டினார் சிந்து. நம்பிக்கை தளராமல் போராடும் சிந்துவிற்கு முதல்வரின் ஆறுதல் மேலும் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

மேலும், சிந்துவின் தந்தை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் தேநீர் கடை நடத்துவதற்கான அனுமதி ஆணையை வழங்கினார். முதல்வரின் இந்த செயல் அனைவரையும் நெகிச்சியடைய செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in