'உங்கள் நல்ல எண்ணத்திற்கு நன்றி' - ரூ.50 லட்சம் வழங்கிய ஓபிஎஸ்சுக்கு ஸ்டாலின் பாராட்டு!

'உங்கள் நல்ல எண்ணத்திற்கு நன்றி' - ரூ.50 லட்சம் வழங்கிய ஓபிஎஸ்சுக்கு ஸ்டாலின் பாராட்டு!

இலங்கை மக்களுக்காக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்டவை அனுப்ப மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், "இலங்கை நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. தமிழர்கள் மனித நேயத்தில் உலகத்திலேயே உயர்ந்தவர்கள் என்பதன் அடையாளமாக இந்தத் தீர்மானம் உள்ளது. அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.123 கோடி மதிப்புள்ள நிவாரண நிதியுடன் சேர்த்து நான் சார்ந்துள்ள குடும்பம் சார்பில் ரூ. 50 லட்சம் நிவாரண நிதியாக தருகிறேன்" என்று தெரிவித்தார்.

இதன்பின் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "இந்த உதவி முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. இன்னும் தேவை என்றால் அடுத்தகட்டமாக வழங்க தமிழக அரசு என்றும் தயாராக உள்ளது. மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், வர்த்தக அமைப்பினர் இலங்கை நாட்டுக்கு உதவி செய்ய முன்வந்தால் அவற்றை ஒருங்கிணைத்து மத்திய அரசு மூலம் வழங்க அரசு தயாராக உள்ளது. அதற்கு முன்னோட்டமாகத்தான் எதிர்க்கட்சி துணைத் தலைவர் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார். மற்றவர்கள் இதைப் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் அறிவித்துள்ளார். அவருடைய நல்ல எண்ணத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in