`இதுவரை அன்பாக நடந்து கொண்டோம்; இனி சட்டப்படி நடப்போம்'- தீட்சிதர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை!

`இதுவரை அன்பாக நடந்து கொண்டோம்; இனி சட்டப்படி நடப்போம்'- தீட்சிதர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை!

சிதம்பரம் கோயிலில் ஆய்வு செய்ய சென்ற அறநிலையத் துறையினருக்குத் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் அமைச்சர் சேகர்பாபு காட்டமான விளக்கத்தை அளித்துள்ளார்.

சிதம்பரம் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு செய்ய உள்ளதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தீட்சிதர்களுடன் அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து இன்று ஆய்வு நடத்தச் சென்ற அறநிலையத் துறையினரைச் சட்ட ரீதியாக அணுகவில்லை எனத் தீட்சிதர்கள் அதிகாரிகளை ஆய்வு செய்ய அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “1951-ம் ஆண்டாக இருந்தாலும் சரி, உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கவுல் அவர்கள் பிறப்பித்த உத்தரவாக இருந்தாலும் சரி சிதம்பரம் நடராஜர் கோயிலைப் பொறுத்தவரை அது பொதுக் கோயில் என்றுதான் ஏற்கெனவே நீதிமன்றத்திற்கு வழக்கு வரப்பட்டிருந்தது. அப்படி பொதுக் கோயிலாக இருக்கின்ற கோயில்களிலிருந்து புகார்கள் எழும் போது, இந்து சமய அறநிலையத் துறை சட்டப் பிரிவு 23 மற்றும் 28-ன் படி அந்த திருக்கோயிலுக்குச் சென்று புகாரின் மீது ஆய்வு செய்து விசாரிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறைகள் கொடைகள் சட்டம் 1959-ன் படி சட்டம் வகுக்கப்படுகிறது. எனவே வந்திருக்கின்ற புகாரின் அடிப்படையில் விசாரிப்பதற்கு வருகிறோம் எனச் சட்டதிட்டங்களை மேற்கோள் காட்டி அறநிலையத் துறையினர் கடிதம் அனுப்பி இருந்தனர். தீட்சிதர்கள் மற்றும் திருக்கோயிலை நிர்வாகம் செய்பவர்கள் 1-ம் தேதிக்குள் அதற்குண்டான ஆட்சேபத்தைத் தெரிவிக்கலாம் எனத் கூறியிருந்தார்கள். அந்த ஆட்சேபனைக்கும் உரியப் பதிலை இந்து சமய அறநிலையத்துறையினர் 3-ம் தேதி திரும்பவும் அனுப்பி இருக்கிறார்கள். சட்டத்தின் ஆட்சி என்பதால் உரியப் புகாரின் படி எழுந்த புகார்கள் குறித்து ஆய்வுக்கு சென்றிருக்கிறார்கள். மடியிலே கனம் இல்லை என்றால், வழியிலே பயம் இல்லை என்பார்கள். எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்றால் ஆய்வுக்கு வருபவர்களை அனுமதிப்பதுதான் மனுதர்மம் என அவர்களுக்குத் தெரிவித்திருக்கின்றோம்.

இந்த திருக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிக்கோள் அல்ல. தீட்சிதர்களுக்கு எதிராகச் செயல்படும் குழுவல்ல இது. நிச்சயமாகச் சட்டத்தை மீறி நாங்கள் எந்தவிதமான செயலிலும் ஈடுபடமாட்டோம் என உறுதி அளித்த பிறகும் அவர்கள் ஆய்வுக்கு மறுப்பதாகச் செய்திகள் வருகின்றன. இதனால் சட்டப்படி கோயிலில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இதுவரை அன்பாக நடந்து கொண்டோம். இனி சட்டப்படி நடப்போம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in