`முதல்வர் சொன்னதால் அடக்கி வாசிக்கிறோம்; எங்களுக்கும் பாயத்தெரியும்' - மதுரை ஆதீனத்திற்கு சேகர்பாபு பதிலடி!

`முதல்வர் சொன்னதால் அடக்கி வாசிக்கிறோம்; எங்களுக்கும் பாயத்தெரியும்' - மதுரை ஆதீனத்திற்கு சேகர்பாபு பதிலடி!

“கோயில்களில் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கக் கூடாது. கருவூலங்களைப் பார்வையிட அவர்களை அனுமதிக்கக் கூடாது” என மதுரை ஆதீனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு.

சென்னையில் இன்று செய்தியாளர்களின் சந்திப்பில் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, “நான் முதல்வர் வழி காட்டுதலோடு மிகவும் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன். நாங்களும் எகிறி அடிக்க முடியும். அது நன்றாக இருக்காது என்ற காரணத்தினால்தான் சற்று பின்னால் வருகின்றோம். அதிக தூரம் ஓடுவது எதற்காக என்றால் குறிப்பிட்ட உயரத்தைத் தாண்டுவதற்காகத்தான் என முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு தத்துவத்தைச் சொல்லி இருக்கிறார். அதனால் எங்களது பதுங்கலை அவர் பயமாகக் கருதக் கூடாது! எங்களுக்கும் பாயத் தெரியும். மதுரை ஆதீனம் தொடர்ந்து அரசியல்வாதிகள் போலப் பேசிக் கொண்டு வருவதை இந்து சமய அறநிலையத் துறை அனுமதிக்காது. அதேபோல் ஆதீனங்களைப் பொறுத்தவரை அவர்களின் உரிமைகளில் தலையிடக் கூடாது என முதல்வர் எங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.

அந்த வகையில்தான் கடந்த 4-ம் தேதி தருமபுரம் ஆதீனம் அவர்கள், அவர் கட்டி முடித்திருக்கின்ற 24 அறைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் என்ற முறையில் என்னை அழைத்துத் திறந்து வைத்தார். அவர் நடத்துகின்ற பாடசாலை, அவர் மேம்படுத்தி வைத்திருக்கின்ற கோசாலை, அவர் நடத்துகின்ற பள்ளிக் கூடங்களையெல்லாம் ஆய்வு செய்து அவரோடு உட்கார்ந்து காலை சிற்றுண்டியைப் பகிர்ந்து கொண்டு வந்துள்ளோம். ஆனால், ஆதீனங்கள் யாரும் எங்களுக்கு ஆதரவாக இல்லை என்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்க மதுரை ஆதீனம் முயன்று வருகிறார். அவர் அரசியல்வாதி ஆகிவிட்ட காரணத்தினால்தான் இப்படிப்பட்ட கருத்தைத் தெரிவிக்கிறார். அரசியல் என்பது அனைவருடைய எண்ணங்களிலும் அவரவர் விரும்புகின்ற கட்சிக்குச் சாதகமாக நிலைப்பாட்டில்தான் இருப்பார்கள். ஆகவே அரசியல்வாதிகள்தான் ஒரு ஆட்சியை உருவாக்குகிறார்கள். ஆட்சியிலேயே ஒரு பொறுப்பில் வருகிறார்கள். எனவே நாங்கள் கோயில் விவகாரங்களில் தலையிடக் கூடாது எனச் சொல்லக் கூடிய உரிமை அவருக்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in