சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு திறந்தவெளி பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு ஆளுநருக்கும் அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. தமிழக அரசு அனுப்பிய 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் வைத்துள்ளார். மேலும் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.
அதே நேரத்தில் ஆளுநர் ரவி இதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதோடு சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதில் அவர் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அண்மையில் மதுரையில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். இப்படி ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு புறக்கணிப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்பார்கள் என்று அழைப்பிதழிலும் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்து இருக்கிறார். இன்றைய பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பேசுவாரா என்று தெரியவில்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பேசாமல் புறக்கணிப்பது நினைவில் கொள்ளத்தக்கது.