`ஏஐசிடிஇ பரிந்துரையை ஏற்க முடியாது; பொறியியல் கட்டணம் உயர்த்தப்படாது'- பொன்முடி அதிரடி அறிவிப்பு

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்தி (ஏஐசிடிஇ) அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டிருந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு கல்விக் கட்டணமே இந்த ஆண்டும் வசூலிக்கப்படும் என உறுதியாக தெரிவித்திருக்கிறார் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் சார்பில் கடந்த வாரத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்தியும், பேராசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தியும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி 3 ஆண்டு என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கு குறைந்தபட்சம் ரூ.67 900, அதிகபட்சம் ரூ.1,40,900மாக கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

பயன்பாட்டுக்கலை மற்றும் கைவினைப்பொருட்கள் படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.81,900, அதிகபட்சம் ரூ. 1,64,700-ம், வடிவமைப்பு படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.82,500, அதிகபட்சம் ரூ.1,61,500, ஓட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.67,900, அதிகபட்சம் ரூ.1,47,800-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகளில், என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பத்துக்கு குறைந்தபட்சம் ரூ.79,600, அதிகபட்சம் ரூ.1,89,800-ம், திட்டப்படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.72 ஆயிரம், அதிகபட்சம் ரூ.2,16,110, பயன்பாட்டுக்கலை மற்றும் கைவினைப்பொருட்கள் படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.1,49300, அதிகபட்சம் ரூ.3,67,900-ம் நிர்ணயிக்கப்பட்டது.

வடிவமைப்பு படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.1,49,300, அதிகபட்சம் ரூ.3,67,900-ம், வடிவமைப்பு படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.1,33,500, அதிகபட்சம் ரூ.3,30,500, ஓட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.81,300, அதிகபட்சம் ரூ.1,91,200-ம் கட்டணம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல முதுகலை படிப்புகளுக்கும் கட்டணம் உயர்த்தி அறிவிப்பு வெளியானது. மேலும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டது.

இதனால் தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏஐசிடிஇ பரிந்துரைத்திருந்தாலும் தமிழ்நாடு அதை ஏற்கப்போவதில்லை. ஏற்க வேண்டிய அவசியமும் இல்லை. அதனால் கடந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணமே இந்த ஆண்டும் வசூலிக்கப்படும்" என்று உறுதியாக அறிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பால் ஏழை மாணவர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in