'பிணவறையில் மாணவனுக்கு மாலை அணிவித்தேன்': பேரவையில் கண்ணீர் வடித்த அன்பில் மகேஷ்!

'பிணவறையில் மாணவனுக்கு மாலை அணிவித்தேன்': பேரவையில் கண்ணீர் வடித்த அன்பில் மகேஷ்!

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற சப்பரத் திருவிழாவில் தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் களிமேடு விபத்து குறித்து தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று உருக்கமான பேசினார். அவர் பேசுகையில்," களிமேடு பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், காலை 5 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

நேரடியாக சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் அங்கு சென்றோம். கடந்த 11 மாதங்களாக பல பள்ளி நிகழ்வுகளில் கலந்து கொண்டு பல மாணவர்களுக்கு பதக்கங்கள், மாலைகள் சூட்டியிருக்கிறேன். ஆனால், அந்த பிணவறையில் நான் 8-ம் வகுப்பு மாணவருக்கு மாலை வைத்தேன்" என பேசிய போது அமைச்சர் கண்கலங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், " முதல்வரிடம் எல்லா உடல்களுக்கும் மருத்துவமனையிலேயே மாலை அணிவித்து விடலாம் எனக் கூறினோம். ஆனால், அதை மறுத்த முதல்வர் அனைவரது வீடுகளுக்கும் நேரடியாக சென்று உறவினர்களுக்கு ஆறுதல் சொல்லவேண்டும் எனக் கூறி அனைத்து வீடுகளுக்கும் நடந்தே சென்று நிவாரண உதவிகளையும் வழங்கினார். இந்த சம்பவம் நடைபெற்றவுடன் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர், வருவாய்த் துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அனைவரும் உதவி செய்தார்கள். விபத்து நடந்த பகுதியில் ஊராட்சித் தலைவர் அதிமுகவைச் சேர்ந்தவர், ஒன்றிய கவுன்சிலர் பாஜகவைச் சேர்ந்தவர், மாவட்ட கவுன்சிலர் திமுகவைச் சேர்ந்தவர். இவர்கள் மூன்று பேரும் இணைந்து பணியாற்றினார்கள். முதல்வர் சட்டப்பேரவையில் கூறும், நமது ஆட்சி என்பது களத்தில் பிரதிபலிக்கிறது. அதேபோல், பேரவையிலும் பிரதிபலிக்க வேண்டும்" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in