தேர்தல் வாக்குறுதியை மீறுகிறதா திமுக?

தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் கொந்தளிப்பு
பணி நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னையில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மினி கிளினிக் மருத்துவர்கள்...
பணி நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மினி கிளினிக் மருத்துவர்கள்...

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா நான்காவது அலை தொடங்கியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், தென் கொரியா, சீனா போன்ற நாடுகளிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ‘கரோனா நான்காவது அலை குறித்து அலட்சியம் கூடாது’ என உலக சுகாதார நிறுவனமும், ‘இந்தியாவில் கரோனா நான்காவது அலை ஏற்படலாம்’ என்று கான்பூர் ஐ.ஐ.டி மாணவர்களின் ஆய்வும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா நான்காவது அலை பரவாமல் இருக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர், அதிகாரிகள் முன்னிலையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது, “முதல் தவணை தடுப்பூசி போடாத சுமார் 50 லட்சம் நபர்கள் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய சுமார் 1.32 கோடி நபர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்த வேண்டும்” என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆனால், அந்த அளவிற்கான மருத்துவக் கட்டமைப்பு தமிழகத்தில் இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வியாக உருவெடுத்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பிற்குப் பிறகு வட்டார, மாவட்ட மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. ஆனால், அதற்கேற்ப மருத்துவர்கள் எண்ணிக்கை இதுவரை அதிகரிக்கப்படவில்லை. இந்த நிலையில் பணியில் உள்ள மருத்துவர்களைக் கொத்தாக வீட்டிற்கும் அனுப்பும் வேலையைத் தமிழக அரசு செய்வதாகப் புகார் எழுந்திருக்கிறது. இப்படியான சூழலில் கரோனா நான்காவது அலை வந்தால் எப்படி கட்டுப்படுத்த முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜி.ஆர்.ரவீந்திரநாத்.
ஜி.ஆர்.ரவீந்திரநாத்.

இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கப் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் கேட்டோம். அவர் கூறுகையில், “அதிமுக ஆட்சியில் கரோனா ஒழிப்பிற்காக அரசு நல்வாழ்வு மைய (மினி கிளினிக்) மருத்துவர்கள் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஒப்பந்தம் முடிந்த பிறகு மீண்டும் வேலை வழங்கப்பட்டது. இப்படி வேலை செய்த சுமார் 1,650 மருத்துவர்களை இந்த மாதம் 31-ம் தேதியோடு நீக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது வருத்தமளிக்கிறது" என்று கூறினார்.

மேலும், “இந்த மருத்துவர்கள் கரோனா ஒழிப்புப் பணியில் உயிரைத் துச்சமென நினைத்துப் பணியாற்றியவர்கள். கரோனா நான்காவது அலை வரும் என்ற அபாய அறிவிப்பு வந்துகொண்டேயிருக்கிறது. தமிழகத்தில் முதல் தவணை, இரண்டாவது தவணை தடுப்பூசி பல கோடி பேருக்குப் போட வேண்டியிருக்கிறது. அது மட்டுமின்றி, சிறார்களுக்கான தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்கும் பணி இருக்கிறது. கரோனா நான்காவது அலை ஏற்படுகிறதா எனக் கண்காணிக்க அன்றாடம் பரிசோதனை, விழிப்புணர்வும் செய்ய வேண்டிய தேவை உள்ளது. இந்த நேரத்தில் இவ்வளவு மருத்துவர்களை வீட்டுக்கு அனுப்பினால், கரோனா தடுப்புப் பணிகள் பாதிக்கப்படாதா? அந்த அளவு மருத்துவர்கள் தமிழகத்தில் பணியில் இருக்கிறார்களா? இவர்கள் மட்டுமின்றி அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்கள், செவிலியர்களைப் பணி நீக்கம் செய்வது மக்கள் நலனுக்கு எதிரானது” என்று கூறிய ஜி.ஆர்.ரவீந்திரநாத், "கரோனா பணிக்காக நியமிக்கப்பட்ட மருத்துவர்களையும், முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த மருத்துவர்களையும் மார்ச் 31-ம் தேதியோடு பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையைத் தமிழக அரசு கைவிட வேண்டும். அவர்களுக்கு மீண்டும் பணிநீட்டிப்பு வழங்க வேண்டும் ” என்று வலியுறுத்தினார்.

இதுகுறித்து மருத்துவத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகம் முழுவதும் கரோனா தீவிரமாகப் பரவிய நேரத்தில் ஒப்பந்த முறையில் பணியில் அமர்த்தப்பட்ட அரசு நல்வாழ்வு மைய மருத்துவர்களின் ஒப்பந்த காலம் முடிவடைகிறது. இதனால் அவர்கள் நீக்கப்படுகிறார்கள்” என்றனர்.

அரசு நல்வாழ்வு மைய மருத்துவர்களிடம் இதைப் பற்றி கேட்டபோது, “2005-ல் ஜெயலலிதா ஆட்சியில் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்களை 2006-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதல்வர் கருணாநிதி பணிநிரந்தரம் செய்தார் என்பது வரலாறு. எனவே, ஒப்பந்த முறையில் பணியில் சேர்ந்த மருத்துவர்களைத் தமிழக அரசு நீக்கும் வேலையைக் கைவிட வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கப்படும் எனத் திமுக தேர்தல் அறிக்கையில் உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. அதை மீறி மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது மக்களின் நலனுக்கு எதிரானது” என்று கூறினர்.

வாக்குறுதி தந்த திமுக அரசு என்ன செய்யப்போகிறது?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in