கரையைக் கடந்தாலும் தரையை விட்டு விலகாத ‘மேன்டூஸ்’

கரையைக் கடந்தாலும் தரையை விட்டு விலகாத ‘மேன்டூஸ்’

மேன்டூஸ் புயல் அபாயம் நீங்கி விட்டாலும் அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை. அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவே தொடர்ந்து  நீடிப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் கடந்த  ஐந்தாம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது ஏழாம் தேதியன்று புயலாக உருவெடுத்தது. ஒன்பதாம் தேதியன்று புயலாக மாறி இரவில் கரையை கடந்தது. இதன் விளைவாக வட மாவட்டங்கள் தொடங்கி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. 

கரையை கடந்து விட்டதால் தமிழகத்தில் அபாயம் பெருமளவு குறைந்து விட்டதாக கருதப்பட்டாலும் வடக்கு மாவட்டங்களில் நேற்றும் இன்றும் மழையின் தாக்கம் குறையவில்லை. மேன்டூஸ் புயல் கரையேறி வலு குறைந்தாலும்,  இன்னமும்  அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே வட உள் மாவட்டங்களில் நீடித்து வருவதே இதற்கு காரணம் என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். 

இதன் விளைவாக இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, வேலூர், கோவை, திருப்பூர், நெல்லை குமரியில் இன்று நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,  தர்மபுரி, சேலம், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு  வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மழைவிட்டாலும் தூவானம் விடாத கதையாக புயல் கரையேறினாலும், அதனால் ஏற்படும் மழை விடாது தொடர்ந்து வருகிறது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in