`நான் முதல்வன்' அடுத்தக்கட்டம்: பிரிட்டிஷ் கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

`நான் முதல்வன்' அடுத்தக்கட்டம்: பிரிட்டிஷ் கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் பிரிட்டிஷ் கவுன்சிலும் இணைந்து பிரிட்டிஷ் உயர் ஆணையர் (British High Commissioner) அலெக்ஸ் எல்லீஸ் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

கடந்த 01.03.2022 அன்று முதல்வர் ஸ்டாலின், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான புதியதோர் முன்னெடுப்பாக `நான் முதல்வன்' திட்டத்தினை திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல் திட்டமாக அறிமுகப்படுத்தினார். இதன் நீட்சியாக தமிழக இளைஞர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுவது மட்டுமின்றி, நேர்முகத் தேர்வுகளுக்கு தங்களை எவ்வாறு ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தங்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

அறிவுசார் இலக்கு மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை பெறும் வகையில் இளைஞர் சமுதாயத்திற்கு திறன் பயிற்சியளித்து உலகெங்கும் தடையின்றி செல்ல ஆங்கில மொழியினை கற்றறியவும் கல்வி மற்றும் கலாச்சாரத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்திடவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் பயிற்சி தரமான கல்வி மற்றும் சர்வதேச தரத்திலான மதிப்பீடுகளை இளைய சமுதாயத்திற்கு அளித்திட வழிவகுக்கும்.

இங்கிலாந்திலுள்ள புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள் உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பிரத்யேக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு பயிற்சியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பயிற்சி தமிழக இளைஞர்களின் பல்வகையான திறன்களை மேலும் மெருகேற்ற வழிவகை செய்யப்படும். இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக இளைஞர்களின் உயர்கல்வி, திறன் மேம்பாடு, கலை மற்றும் பண்பாடு ஆகியவை வலுப்படுத்தப்படும். பிரிட்டிஷ் கவுன்சில் தமிழக அரசுடன் ஒருங்கிணைந்து தமிழகத்திலுள்ள நூலக வல்லுநர்கள் தொடர் தொழில்முறை முன்னேற்றத்திற்கும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்யும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in