அடுத்தடுத்து அமைச்சர்களை சந்திக்கும் எம்.பி

நலத்திட்டங்களுக்கு கோரிக்கை விடுக்கிறார்
அமைச்சர் மா.சுப்ரமணியனை சந்திக்கும் ஜோதிமணி
அமைச்சர் மா.சுப்ரமணியனை சந்திக்கும் ஜோதிமணி

காங்கிரஸ் கட்சிட்யைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தனது தொகுதிக்கான நலத்திட்டங்களை முன்வைத்து மாநிலத்தின் அமைச்சர்களை அடுத்தடுத்து சந்தித்து கோரிக்கை வைக்கிறார்.

திமுக அரசு பதவியேற்றதிலிருந்து கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் நலத்திட்டங்களை தொடங்கிவைக்கவோ, ஆய்வுக்காகவோ வரும் மாநில அமைச்சர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. இதுவரையிலும் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செந்தில்பாலாஜி, சேகர்பாபு, ரகுபதி உள்ளிட்ட கரூருக்குள் வந்த பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்களை நேரில் சென்று சந்தித்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்காக கோரிக்கை விடுத்திருக்கிறார் ஜோதிமணி. அதுமட்டுமில்லாமல் சென்னை தலைமைச்செயலகம் சென்று, பல்வேறு துறை அமைச்சர்களையும் சந்தித்து முக்கிய கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டிக் கொள்கிறார்.

அதன்படி கடந்த 22-ம் தேதி மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை சந்தித்தார். கரூர், திருச்சி, கோவையில் புற்றுநோய் சிகிச்சை மையங்களை அமைத்திட வேண்டும், விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் தொடங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்பாக அவர் அமைச்சரை சந்தித்தார்.

தமிழ்நாட்டில் குறிப்பாக கரூர், கோவை, திருச்சி ஆகிய பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்களிடம்
புற்றுநோய் குறித்த பயம், குடும்ப சூழல், போதுமான விழிப்புணர்வு இன்மையால் ஆரம்பத்தில் கண்டறிய முடிவதில்லை. புற்றுநோய் முற்றிய நிலையில் பெரும்பாலும் குணமாக்க இயலாமல் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகின்றன.

ஒருவேளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டாலும் ஏழை, எளிய, கிராமப்புற மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பது மிகுந்த சவாலாக உள்ளது. மக்கள் தரமான சிகிச்சைக்காக வெகு தொலைவில் இருக்கும் சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கோ, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கோ செல்ல வேண்டியுள்ளது.

ஆகவே, தமிழ்நாட்டில் புற்றுநோயை தடுப்பதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். அதற்காக புற்றுநோய் உயர் சிகிச்சைக்காக மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்களை கரூர், கோவை, திருச்சி ஆகிய இடங்களில் அமைக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் பரிசோதனை மற்றும் முதல்நிலை சிகிச்சை மையம் அமைக்கவேண்டும்.

‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டப் பணியாளர்கள், கிராமப்புற செவிலியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் மூலம் புற்றுநோய் குறித்து, சுயபரிசோதனை உள்ளிட்ட நோய் கண்டறியும் முறை மற்றும் சிகிச்சைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

நோய்பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு விரைவாக பரிசோதனைசெய்யவேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் புற்றுநோயை ஆரம்பநிலையிலோ, வருவதற்கு வாய்ப்புள்ள நிலையிலோ கண்டறிய VILI VIA எனும் முக்கிய பரிசோதனை அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்டது. இது குறித்த விளம்பரங்கள் தொடர்ச்சியாக வானொலியில் ஒலிபரப்பப்பட்டன. மோடி ஆட்சியில் நிறுத்தப்பட்டுவிட்ட இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று அமைச்சரிடம் ஜோதிமணி கேட்டுக்கொண்டார்.

இதன் தீவிரத்தை புரிந்துகொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், உடனடியாக கரூர்,திருச்சி,கோவையில் புற்றுநோய் பரிசோதனை மையங்களை அமைப்பதாக உறுதியளித்ததாக ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in