மருத்துவ மேற்படிப்பு: தமிழக அரசின் 50% இடஒதுக்கீட்டிற்கு அனுமதி

மருத்துவ மேற்படிப்பு: தமிழக அரசின் 50% இடஒதுக்கீட்டிற்கு அனுமதி

மருத்துவ மேற்படிப்பில் தமிழக அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மருத்துவ மேற்படிப்பில் மாணவர்களை நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவா்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு கடந்த 2020-ம் ஆண்டு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அரசாணையின் நிலைப்பாட்டை ஏற்று நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கலாம் என உயர்நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பல்வேறு மருத்துவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘மாநில அரசு பிறப்பித்த அரசாணைக்கு எந்த தடையும் கிடையாது’’ என கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கி இருந்தது. இதையடுத்து 2022-ம் ஆண்டு மருத்துவ கலந்தாய்வின் போது 50 சதவீத இடஒதுக்கீட்டை பயன்படுத்த தடை கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதற்கு தடை விதிக்க மறுத்ததோடு, இந்த ஆண்டே 50 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டு அதுசார்ந்த மனுவையும் தள்ளுபடி செய்தது.

இந்த விவகாரத்தில் தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் உட்பட 5 மருத்துவர்கள் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், 'சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்குகிறோம்.

தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு தந்த அரசாணையை இடைக்காலமாக செயல்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மருத்துவ உயர்படிப்புகளில் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிரான ரிட் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம். 50% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பிரதான வழக்கு விடுமுறைக்குப் பிறகு விசாரிக்கப்படும்" என்று கூறினர்.

இதனிடையே, எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50%

இட ஒதுக்கீடு செய்து எனது தலைமையிலான அம்மா அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என்றும் அதற்கான கலந்தாய்வு நடத்த அனுமதியும் அளித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பினை உளமாற வரவேற்கிறேன். தமிழர் நலனுக்காகவும் தமிழகம் தன்னிறைவு பெறுவதற்கும் அதிமுக தொடர்ந்து பாடுபடும் என உறுதி கூறுகிறேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.