‘சிறப்புறுக செருப்பாளர்கள்': வைரமுத்து கருத்து!

‘சிறப்புறுக செருப்பாளர்கள்': வைரமுத்து கருத்து!
வெள்ளலூர் பெரியார் சிலை

கோவை வெள்ளலூர் பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்ததுடன், காவி நிறத்திலான பொடிகளை தூவிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 2-வது நாளாக இன்றும்(ஜன.10) தமிழகத்தில் அதிர்வலைகள் எழுந்து வருகின்றன.

திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்பினரும் திமுக, விசிக உள்ளிட்ட கட்சியினரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விஷமிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, சிலை அமைந்துள்ள பகுதியின் சிசிடிவி ஆவணங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்தது தொடர்பாக, இன்று காலை முதல் ட்விட்டரில் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்து தன்னுடைய பாணியில் பதிவிட்ட கருத்தில், ‘‘இப்படி ஓர் எதிர்ப்பு வடிவத்தைக் கற்றுக் கொடுத்தவரே பெரியார்தான். பெரியாரை அவமதிக்கிறவர்களுக்கும் பெரியார்தான் ஆசான். ‘வாழ்க வசவாளர்கள்’ என்றார் அண்ணா. ‘சிறப்புறுக செருப்பாளர்கள்’ என்போம் நாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன், ‘‘கோவை மாவட்டத்தில் வெள்ளலூரில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையை அவமதித்த சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். இத்தகைய வெறுப்பு அரசியலைத் தமிழ் மண்ணில் விதைத்து வரும் சனாதன சக்திகளின் கொட்டத்தை ஒடுக்கவேண்டும்’’ என்று பதிவு செய்துள்ளார்.

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய பதிவில், ‘’ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும், வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

பாஜக எம்எல்ஏவான வானதி சீனிவாசன், ’‘கருத்தியல் ரீதியாக இல்லாமல், சிலைகளை அவமதிப்பது, தனிப்பட்ட காழ்ப்புணர்வு தாக்குதல்கள் என இம்முயற்சிகள் பதட்டத்தை உருவாக்குவதை தவிர வேறொன்றில்லை. நாட்டின் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் மீது எத்தனை வன்மம், கொடுஞ்சொற்கள்? அவரது படத்தை அவமரியாதை செய்வது என எத்தனை செயல்கள்?’’ என்று தெரிவித்துள்ளார்.

இரு தினங்களாக ட்விட்டரின் டிரெண்டிங் பதிவுகளில் ஒன்றாக #பெரியார் என்பதும் விளங்கி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in