`தமிழக மாணவர்களுக்கு உதவுகிறோம்'- முதல்வரிடம் மலேசிய அமைச்சர் உறுதி

`தமிழக மாணவர்களுக்கு உதவுகிறோம்'- முதல்வரிடம் மலேசிய அமைச்சர் உறுதி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் சந்தித்துப் பேசினார். அப்போது, தங்கள் நாட்டுக்கு வர வேண்டும் என முதல்வருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

மலேசியாவில் தமிழக தொழிலாளர்களின் நலத்திட்ட அமைப்புகளை கட்டமைப்பது தொடர்பாக மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமிழக முதல்வருடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்திற்கு வெளியில் உலகிலேயே அதிகம் தமிழர்கள் வசிக்கும் நாடான மலேசியாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக வருகை தர வேண்டும் என்று அமைச்சர் சரவணன் கேட்டுக் கொண்டார்.

உக்ரைனில் படிப்பை தொடர முடியாமல் திரும்பிய தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு மலேசியாவில் தொடர்வதற்கு நாங்கள் ஒத்துழைப்பு நல்க தயாராக இருக்கிறோம் என்று டத்தோஸ்ரீ சரவணன் முதல்வரிடம் உறுதியளித்தார். மேலும், தொழிலாளர்கள் தொடர்பாக இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுப்பதன் அவசியம் குறித்து மலேசிய அமைச்சர் எடுத்துரைத்தார்.

மலேசிய சமூக பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஹனிஃபா, மலேசியா பாதுகாப்பு அமைப்பின் செயல்முறை அலுவலர் டத்தோஸ்ரீ அஸ்மான், மலேசிய மனிதவள அமைச்சின் திறன் மேம்பாட்டு வாரியத் தலைவர் டத்தோ ஷாகுல் ஹமீத், தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் சந்திப்பில் உடன் இருந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய அமைச்சர் சரவணன், தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகள், மறுசீரமைப்பு வாய்ப்புகள், வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சுற்றியுள்ள பிற பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.