23 முக்கிய கோரிக்கைகளுடன் முதல்வரை நேரில் சந்தித்த மதுரை எம்பி

மனுவில் இருக்கும் கோரிக்கைகள் என்னென்ன?
முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த மதுரை எம்பி வெங்கடேசன்
முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த மதுரை எம்பி வெங்கடேசன்twitter

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்த மதுரை எம்பி சு.வெங்கடேசன், 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்திருக்கிறார்.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம் மதுரை. தமிழ்நாட்டிலேயே மிக மூத்த நகரும் அதுவே. ஆனால், வளர்ச்சியில் கோவையுடன் ஒப்பிடுகையில் சுமார் 50 ஆண்டுகளும், திருச்சியுடன் ஒப்பிட்டால் சுமார் 20 ஆண்டுகளும் பின்னே நிற்கிறது மதுரை. இந்நகர் வளர்ச்சிக்காக பெரிய கோரிக்கைப் பட்டியலுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்திருக்கிறார் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன். இன்று தமிழக முதல்வரை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்த அவர் 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்திருக்கிறார்.

அந்த மனுவில் உள்ள முக்கிய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-

கோரிக்கை மனு
கோரிக்கை மனு twitter

1. மதுரை மாவட்டத்தில் மேலூர் உள்ளிட்ட 4 இடங்களில் புதிதாக தொழிற்பேட்டை தேவை.

2. ஏற்கெனவே 2001ம் ஆண்டு உள்ளூர் திட்டக்குழுமத்தால், வெறும் 4 சதவீத நிலம் மட்டுமே தொழிற்சாலைகளுக்கான நிலமாக அறிவிக்கப்பட்டது. இந்தக் குறுகிய ஒதுக்கீடே மதுரையின் தொழில் வளர்ச்சிக்கான தடையாகக் கருதப்படுகிறது. எனவே, 10 சதவீத நிலத்தை தொழிற்சாலை நிலமாக அறிவித்து, அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

3. மதுரை - தூத்துக்குடி தொழில் பெருவழித்தடம் திட்டம் வெறும் அறிவிப்போடு நிற்கிறது. அதில் எலெக்ட்ரானிக் தொழிற்பூங்காக்களை அமைப்பதுடன், அதற்கென தனி ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும்.

4. மதுரையில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவை மதிப்பு கூட்ட (அப்கிரேட்) வேண்டும்.

5. ஒரு காலத்தில் டெக்ஸ்டைல் உற்பத்தியில் முன்னோடி மாவட்டமாக இருந்த மதுரை, இப்போது பின்தங்கியுள்ளது. எனவே, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ளதைப் போல இங்கும் கைத்தறி, ஜவுளி, சுங்கடிச் சேலை உற்பத்தியாளர்களுக்கான வாரச் சந்தை மதுரையிலும் தொடங்கப்பட வேண்டும்.

6. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் டைசல் பூங்கா -TICEL PARK (சென்னை, கோவையில் இருப்பது போல) தொடங்க வேண்டும்.

7. மதுரை மத்திய சிறையை புறநகர்ப் பகுதிக்கு மாற்ற வேண்டும்.

8. இப்போது மத்திய சிறை உள்ள இடத்தில், சிந்து முதல் வைகை வரை என்ற தலைப்பில் தமிழர் நாகரிகத்துக்கான அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

9. மதுரை விரகனூர் சந்திப்பு, மண்டேலா நகர் சந்திப்பு, மேலமடை, அரசு ராஜாஜி மருத்துவமனை சாலை, மாட்டுத்தாவணி, தெற்கு வாசல், கோரிப்பாளையம் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் தேவை.

10. மேயர் முத்து பாலம், பழங்காநத்தம் வ.உ.சி. பாலம் ஆகியவற்றை புதுப்பித்து விரிவாக்க வேண்டும்.

11. மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தேவை.

12. ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு வைகை ஆற்றைப் பாதுகாக்க வேண்டும்.

13. மதுரையின் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரிவுபடுத்துவதுடன், கழிவுநீர் வைகையில் கலப்பதைத் தடுக்க வேண்டும்.

14. மதுரை நகர் சாலைகள் மிக மோசமாக உள்ளன. எனவே, சாலை மற்றும் நடைபாதைகளை முறையாகவும், தரமாகவும் உருவாக்க 150 கோடியில் திட்டம் தேவை.

15. அலங்காநல்லூரில் அதிநவீன ஜல்லிக்கட்டு கலையரங்கு கட்ட வேண்டும்.

16. மதுரையில் உள்ள உலகத்தமிழ்ச் சங்கத்தில் எந்த உருப்படியான பயன்பாடும் நடைபெறவில்லை. உலகத் தமிழ்ச் சங்கம் என்ற பெயருக்குப் பொருத்தமான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

17. மதுரையில் புதிய அரசு கல்லூரி தேவை. அவுட்போஸ்ட் காமராசர் பல்கலைக்கழக கல்லூரியையும் அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும். கொட்டாம்பட்டி பகுதியில் அரசு ஐடிஐ தொடங்க வேண்டும்.

18. மதுரை விமான நிலைய விரிவாக்கம், உள்வட்டச் சாலை, வெளிவட்டச் சாலை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு தேவை.

19. அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலையை தமிழக அரசு இயக்க முன்வர வேண்டும். இயக்க செலவுக்கு 10 கோடி நிதி தேவை.

20. பெரியாறு உபரி நீரை சாத்தையாறு அணைக்கு கொண்டு செல்ல திட்டம் தேவை.

21. மேலூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு வேண்டும்.

22. இந்திய வானியல் துறை அறிக்கையின்படி, தமிழகத்திலேயே மழை குறைகிற ஒரே மாவட்டம் மதுரை தான் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, மதுரையின் பசுமை போர்வையை அதிகரிக்கவும், ஏற்கெனவே உள்ள காடுகளைப் பாதுகாக்கவும், நீர்நிலைகளை மீட்டுருவாக்கம் செய்யவும், சூழலியலை மேம்படுத்தவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

23. மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து கட்டவும், தேசிய மருந்து சார் கல்வி மற்றும் அறிவியல் கழகத்தை மதுரையில் தொடங்கவும், மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கவும் ஒன்றிய அரசுக்கு மாநில அரசு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in