காத்திருப்போர் பட்டியலில் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர்: சம்ஸ்கிருத உறுதிமொழியால் அதிரடி

காத்திருப்போர் பட்டியலில் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர்: சம்ஸ்கிருத உறுதிமொழியால் அதிரடி

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த முதலாமாண்டு மாணவர்களுக்கான வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியின்போது, சம்ஸ்கிருத உறுதிமொழி எடுத்த விவகாரத்தில் கல்லூரி முதல்வரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாணவர் சேர்க்கையின்போது, வழக்கம் போல், முதலாமாண்டு மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பொதுவாக ‘ஹிப்போக்ரடிக் ஓத்’ எனப்படும் உறுதிமொழி எடுப்பது வழக்கம். ஆனால், ‘மகரிஷி சரக் சபத்’ என்ற சம்ஸ்கிருத உறுதிமொழியின் ஆங்கில மொழிபெயர்ப்பை மாணவர்கள் உறுதிமொழியாக எடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் நேற்று பெரும் சர்ச்சையானது. இதனை எடுத்தது எப்படி என்பது குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வரிடம், துறைரீதியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, மதுரை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல் கூறுகையில், ‘‘மாணவர் சேர்க்கையின் போது, மாணவர்களின் தலைவர் பொறுப்பில் இருப்பவர் தலைமையில் உறுதிமொழி எடுப்பது வழக்கம். இதன்படி மாணவர் தலைவர் உறுதிமொழி வாசிக்க, அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

சம்ஸ்கிருதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, நேஷனல் மெடிக்கல் கவுன்சில் வெப்சைட்டில் வைக்கப்பட்டுள்ள உறுதிமொழி வாசகங்களை மாணவர் தலைவர் படிக்க அனைவரும் அதைத்தொடர்ந்து கூறி, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அரசு வெப்சைட்டில் இருந்ததால், இதை சரி என நினைத்து மாணவர் தலைவர் வாசித்துவிட்டார். மேலும், பேராசிரியர்களிடமோ, என்னிடமோ அவர் அனுமதி கேட்கவில்லை. அப்படி கேட்டிருந்தால், இது தடுக்கப்பட்டிருக்கும்’’ என்றார்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளில் புதியதாக சேரும் மாணவர்களுக்கும் மற்றும் மருத்துவக்கல்வி முடித்து மருத்துவ பயிற்சியில் சேரும் மாணவருக்கும் ஹிப்போகிரேடிக் உறுதிமொழி காலம்காலமாக அனைத்து மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் தொடங்கிய காலத்திலிருந்து பின்பற்றி வரப்படுகிறது. அரசு மதுரை மருத்துவக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற புதிதாக சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஹிப்போகிரேடிக் உறுதிமொழி பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும்.

இதன் பொருட்டு மதுரை மருத்துவக்கல்லூரி டீன் ரத்தினவேல் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகிறார். மேலும், தன்னிச்சையாக விதிமுறையை மீறி ஹிப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழியை மாணவர்களிடம் எடுக்க வைத்ததிற்கு துறை ரீதியாக விசாரணை நடத்த மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அனைத்து மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும் துறை தலைவர்களும் எப்பொழுதும் பின்பற்றப்படும் ஹிப்போகிரேடிக் உறுதிமொழியையே தவறாது கடைபிடிக்க மருத்துவக்கல்வி இயக்குநர் மூலம் சுற்றிக்கை மூலம் அறிவுறுத்தப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in