`ஆங்கிலேயர்களாலேயே முடியாதபோது இவர்கள் என்ன செய்துவிட முடியும்?'- மதுரை ஆதீனம் ஆவேசம்

எரிந்த சப்பரத்துக்கு அஞ்சலி செலுத்தும் ஆதீனம்
எரிந்த சப்பரத்துக்கு அஞ்சலி செலுத்தும் ஆதீனம்

தருமபுர ஆதீனத்தில் பட்டின பிரவேசம் நிகழ்வின்போது ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து மனிதர்கள் சுமந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள விவகாரம் தமிழகத்தில் அக்கினி நட்சத்திர வெயிலால் ஏற்பட்டிருக்கிற வெப்பத்தைவிட அதிக வெப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை ஆதீனமும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தாங்களே நேரில் வந்து பல்லக்கை சுமந்து செல்ல தயாராக இருக்கிறோம் என்று முழங்கியிருக்கிறார்கள்.

தமிழக சட்டப்பேரவையில் பிரதான எதிர்கட்சியான அதிமுக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறது. இப்படி பரபரப்பாக இந்த விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் தஞ்சாவூர் அருகே மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த களிமேடு கிராமத்திற்கு மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் இன்று வந்திருந்தார். அங்கு இந்த விவகாரம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆவேசமாக தனது கருத்துகளை அவர் தெரிவித்தார்.

``தஞ்சாவூர் அருகே களிமேட்டில் அப்பர் சதய விழாவை ஒவ்வொரு ஆண்டும் அடியார் பெருமக்கள் சிறப்பாக நடத்தி வந்துள்ளனர். ஆனால் தற்போது நடைபெற்ற இந்த தேர் விபத்து ஒரு துயரமாக இருக்கிறது. ஒரு தேர் வருவதாக இருந்தால் மின்சாரத்துறை உரிய ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதேபோல் சாலையை நெடுஞ்சாலைத்துறை சீரமைத்து கொடுத்திருக்க வேண்டும். யார் மேல் தவறு உள்ளது என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

மதுரை ஆதீன கோயில்களின் இடங்களை குத்தகைக்கு வைத்துக் கொண்டு ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்கின்றனர். முன்பிருந்த சன்னிதானத்தின் உடல்நிலை சரியில்லை என்பதை காரணமாக வைத்துக் கொண்டு அவர்கள் குத்தகை கொடுக்கவில்லை. முன்பிருந்த சன்னிதானம் குத்தகையும் கேட்கவில்லை. நான் கேட்டால் கொடுக்க மறுக்கிறார்கள்.

சட்டமன்றத்தில் கோயில் திருப்பணி செய்யுமாறு கூறுகின்றனர். குத்தகையை கொடுத்தால் தானே கோயில் திருப்பணி செய்ய முடியும். குத்தகையும் கொடுப்பதில்லை, நிலத்தின் வரியும் கொடுப்பதில்லை, கோயில் இடத்தில் வீடு கட்டிக் கொண்டு வாடகையும் கொடுப்பதில்லை. இதை கேட்டால் என்னை அடிப்பேன் என மிரட்டுகின்றனர்.

அப்பர் மடத்தில்  மதுரை ஆதீனம்
அப்பர் மடத்தில் மதுரை ஆதீனம்

நீ திருப்பணி செய்து விடுவாயா என மிரட்டுகின்றனர். ஆனால், சட்டமன்றத்தில் மட்டும் கோயில் திருப்பணி செய்யவில்லை என பேசுகின்றனர். இதில் எல்லா அரசியல் கட்சியினரும் உள்ளனர். ஆனால் ஆளுங்கட்சியினர் தான் அதிகம் இடத்தை வைத்துள்ளனர்.

பட்டின பிரவேசம் என்பது 500 ஆண்டுகளாக நடந்து வருகிறது. மதசார்பற்ற நாடு என சொல்லிக் கொண்டு ஒரு மதத்தை மட்டும் கட்டுப்படுத்துவது ஏன்? இந்து சமயத்தை அழிக்க ஆங்கிலேயர்களாலே முடியாதபோது, இவர்கள் என்ன செய்துவிட முடியும். இதையெல்லாம் மேலே உள்ள கடவுள் பார்த்துக் கொள்வார்.

நான் எனது மடத்துக்குட்பட்ட கஞ்சனூர் கோயிலுக்கு செல்கிறேன். யாரும் என்னை தடுக்க முடியாது. அந்த கோயிலுக்கு உட்பட்ட பகுதியில் மடத்தின் சொத்துகளை வைத்துக் கொண்டு ஆளுங்கட்சியினர் மிரட்டுகின்றனர், குத்தகையை கொடுக்க மறுக்கின்றனர். என்னை மிரட்டுவதால், எனது உயிருக்கு ஆபத்து என்றால் நான் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து ஆளுங்கட்சி குறித்து பேசுவேன். மேற்கொண்டு என்ன நடந்தாலும் நான் பார்த்துக் கொள்வேன்" என்றார் மதுரை ஆதீனம்.

படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in