சென்னையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய லூகஃபே கழிப்பறைகள் திறப்பு!

சென்னையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய லூகஃபே கழிப்பறைகள் திறப்பு!
நவீன கழிப்பறை திறப்பு

சென்னை மாநகராட்சி முழுவதும் அதிநவீன வசதிகளுடன் கூடிய 50 கழிப்பறைகளை அமைக்க தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக அடையாறு பகுதியில் ‘லூகஃபே’ என்னும் அதிநவீன கழிப்பறை திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

கழிப்பறை
கழிப்பறை

சென்னை அடையாறு எம்.ஆர்.டி.எஸ்., ரயில் நிலையம் அருகே, ராஜீவ் காந்தி சாலையில் ‘லூகஃபே’ என்னும் அதிநவீன கழிப்பறை நேற்று திறக்கப்பட்டுள்ளது. இங்கு அனைவரும் பயன்படுத்தும் வகையில் பல்வேறு நவீன வசதிகள் இருப்பதால் மக்கள் ஆர்வமுடன் இந்த கழிப்பறைகளைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். ‘லூகஃபே தூயா' என அழைக்கப்படும் புதிய வகை கழிப்பறையைப் பொதுமக்கள் இலவசமாகப் பயன்படுத்தலாம். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இக்சோரா எப்.எம். நிறுவனம், மதுரையைச் சேர்ந்த தூயா இன்னோவேஷன்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து, 'லூகஃபே' கழிவறைகளை அமைத்துள்ளது. தூயா இன்னோவேஷன்ஸ் தலைவர் தமிழ்மணி, தூயா இன்னோவேஷன்ஸ் நிர்வாக இயக்குநர் சி.ஆர்.வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சி.ஆர். வெங்கடேஷ் கூறுகையில், “மாற்றுத் திறனாளிகள் கழிவறைக்குச் செல்ல ஏதுவாக, சாய் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பார்வையற்றோர் பயன்படுத்தும் வகையில் பிரெய்லி முறையிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 5 ரூபாய் நாணயத்தைப் போட்டால் 'நாப்கின்' வழங்கும் வகையில் தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில், ஈரப்பதத்தைத் தண்ணீராக மாற்றுவதற்கான திட்டங்கள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன. ஓராண்டிற்குள் சென்னை மாநகர் பகுதிகளில் 50 லூகஃபேக்கள் நிறுவப்பட உள்ளன. அடுத்தகட்டமாக வேளச்சேரி, பெசன்ட்நகர், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் லூகஃபேக்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான இடத்தை அரசு ஒதுக்கும். வரும், 2024-ம் ஆண்டிற்குள், தமிழகம் முழுதும், 100 லூகஃபேக்கள் தொடங்க உள்ளோம். அடுத்த சில மாதங்களில் கோவை, திருச்சி, மதுரை, கொடைக்கானல் ஆகிய நகரங்களில் உணவகங்கள், பிரபலமான டீ, காபி பிராண்டுகளுடன் இணைந்து கழிவறைகளை நிறுவ அரசுடன் பேச்சு நடத்தி வருகிறோம். இதுபோல , பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து, மற்ற இடங்களில் லூகஃபேக்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அளவுக்கு மீறிய துர்நாற்றம் வீசினால், எச்சரிக்கை தகவல் அனுப்பும் அளவிற்குத் தொழில்நுட்ப வசதிகள் உள்ளதால் கழிப்பறை தூய்மையாக பராமரிக்கப்படும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in