இணைந்து நிற்போம்; இந்தப் பேரிடரையும் எளிதாய் கடப்போம்!

இணைந்து நிற்போம்; 
இந்தப் பேரிடரையும் எளிதாய் கடப்போம்!
கனமழையால் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் பாய்ந்த பேருந்து

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகி அதன்பின்னர், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்பதால், தமிழகத்தில் இன்றும் நாளையும் (நவ.10,11) மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரித்திருக்கிறது வானிலை ஆய்வு மையம். ஆனால், அதற்கு முன்பாகவே பெய்துவரும் அதிகனமழையால் 4 நாட்களுக்கும் மேலாக சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. பல இடங்களில் நிவாரண முகாம்களை மக்கள் நாடியிருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின், தினமும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விரைவான நிவாரண நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மழை, வெள்ள பாதிப்புக்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆளும்கட்சியை குறை சொல்லியிருக்கிறார்கள்.

சென்னையில் வெள்ளம்
சென்னையில் வெள்ளம்

தற்போதே கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பயிர்கள் மூழ்கியுள்ளன. பயிர்களை நவ.15-ம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ளுமாறு அவசரமாக அறிவித்துள்ளது வேளாண் துறை. மதுரை வண்டியூர் கம்மாய் தொடங்கி, மதுராந்தகம் ஏரிவரையிலும் கிட்டத்தட்ட அனைத்து குளங்களும், ஏரிகளும் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. தமிழகம் முழுவதுமுள்ள 90 அணைகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. டெல்டாவில் பெய்துவரும் மழையின் நீரே வடியாத நிலையில் மேட்டூரும் தனது முழுக் கொள்ளளவை எட்டி, 20,000 கன அடி அளவுக்கு உபரிநீரை வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் என்னதான் சொல்கிறது வானிலை? நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னவென்பது குறித்தும் இந்நேரம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்வது நல்லது. அதற்கேற்ப முன்னெச்சரிக்கை மற்றும் ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். இன்றும் நாளையும் அதீதகனமழை இருக்கும் என்று இந்திய, நார்வே வானிலை ஆய்வு மையங்களும் எச்சரித்துள்ளன.

சாலைகளில் வெள்ளம்
சாலைகளில் வெள்ளம்

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, நிலைமையை சமாளிக்க பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிலைமையை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து நிலைமையை துல்லியமாக கணிப்பதில் வல்லவர்களான தனியார் வானிலை ஆய்வாளர்களிடம் பேசினேன்.

’’தமிழகத்தில் இந்த வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அக்டோபர் தொடங்கி டிசம்பர் மாதம் வரையிலுமான சராசரி மழையளவு 44 செ.மீ. ஆனால் தற்போது வரையிலுமே 37 செ.மீ மழை பெய்துவிட்டது. சராசரியை விட அதிகமான மழை பெய்யும் என்பது உறுதி. இப்போது வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது கரையேறும்போது, தமிழ்நாட்டில் சராசரி மழையளவைக் கடந்திருக்கும் அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும்.

நவ.10, 11 தேதிகளில் நாகை தொடங்கி சென்னைவரை கனமழையும், சில இடங்களில் அதிகனமழையும் பெய்யும். கரையைக் கடக்கும்போது அந்தப் பகுதியில் காற்றைவிட அதிகமாக மழைப்பொழிவு இருக்கும். அதிகனமழை என்றே சொல்லலாம். அதனால், மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொண்டு தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார், டெல்டா வெதர்மேன் என்றழைக்கப்படும் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த இளம் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர்.

ஹேமச்சந்தர்
ஹேமச்சந்தர்

தனியார் வானிலை ஆய்வாளர், ஆசிரியர் செல்வகுமாரிடமும் இதுகுறித்துப் பேசினேன். ‘’இந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாதத்திற்கு 25 நாட்கள் வரையிலும் கன, மிககனமழை இருக்கும். தற்போதைய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இன்று (நவ.10) அது, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்து வடதமிழகம், புதுச்சேரி, சென்னைக்கு இடைப்பட்ட பகுதியில் நாளை கரையை கடக்கும். அதுவரையிலும் கனமழை பெய்யும். இந்த மழையின் வேகம் 11-ம் தேதி மாலைதான் குறையும். மயிலாடுதுறை தொடங்கி சென்னை வரையிலும் இம்மழை அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.

மற்றப் பகுதிகளில் 48 மணிநேரமும், சென்னையில் 36 மணிநேரமும் இந்த கனமழை நீடிக்கும். அதனால், சென்னையில் தண்ணீரின் அளவு இன்னும் பல பகுதிகளில் அதிகரிக்கும். மழையின் வேகம்தான் குறையுமே தவிர மழை இருந்துகொண்டுதான் இருக்கும். 17, 18 தேதிகளில் இதேபோன்ற கனமழை வாய்ப்பு மீண்டும் இருக்கும். அதுவும் சென்னைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்றே தெரிகிறது. 19-ம் தேதி வரையிலும் இந்த மழை தொடரும்.

செல்வகுமார்
செல்வகுமார்

ஆகவே, இப்போது இருக்கும் மழை முழுமையாக விலக 19-ம் தேதி வரைக்கும் காத்திருக்க வேண்டும். 20-ம் தேதிதான் வெயில் இருக்கும். 21 முதல் 24-ம் தேதிவரை 4 நாட்களுக்கு மழை இருக்காது. 25-ம் தேதி அடுத்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அல்லது மண்டலம் உருவாகி அதுவும் மழை தரும் நிகழ்வாக அமையும். அப்போதும் அதிகனமழை வாய்ப்பிருக்கிறது. அது டிசம்பர் 3 வரை நீடிக்கும். டிசம்பரிலும், ஜனவரியிலும் கூட மேலும் நிகழ்வுகள் இருக்கின்றன. மாதத்தில் 4 அல்லது 5 நாட்கள் தான் மழையில்லாமல் இடைவெளி இருக்கும்” என்கிறார் செல்வகுமார்.

வானிலை ஆய்வு மையங்களும், ஆய்வாளர்களும் இப்படி கடுமையான எச்சரிக்கைகளை விடுத்திருக்கும் நிலையில் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருவரை ஒருவர் குறைசொல்லிக் கொண்டிருக்காமல், எதிர்வரும் இந்தப் பேரிடர் காலத்தில் மக்களை காப்பாற்ற ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். தன்னார்வலர்கள் மற்றும் சேவை அமைப்பினரும் அரசின் முயற்சிகளுக்கு கைகொடுக்க வேண்டும். பொதுமக்களும் எல்லாவற்றுக்கும் அரசை மட்டுமே எதிர்பார்த்திருக்காமல், தங்களால் இயன்றதை பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய முயலவேண்டும். ஆபத்தில் தவிப்போரை காப்பாற்ற வேண்டும்.

விழுப்புரத்தில் வெள்ளத்துக்கு  தாக்குப்பிடிக்காத  புதிய அணை
விழுப்புரத்தில் வெள்ளத்துக்கு தாக்குப்பிடிக்காத புதிய அணை

மக்கள் எச்சரிக்கையாக இருக்க சில நினைவூட்டல்கள் :

கேஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, ஒரு வாரத்துக்குத் தேவையான காய்கறி, மளிகை சாமான்கள், மாத்திரைகள், குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர்கள், டயப்பர்கள், நாப்கின்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளை தயாராக கையிருப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.

மழை பொழியும் சமயத்தில் வெளியே அல்லது வெளியூர் செல்வதைத் தவிர்த்திடுங்கள். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்கிக்கொள்ளுங்கள். பாதுகாப்பில்லாத வீடுகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள். கீழ்த்தளத்தில் இருப்பவர்கள் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பான்கார்டு, லைசென்ஸ், பத்திரங்கள் போன்றவற்றை பாலிதீன் உறைகளில் போட்டு பாதுகாப்பான இடங்களில் வையுங்கள்.

குழந்தைகளைத் தேவையின்றி வெளியே விட வேண்டாம். மழை நேரங்களில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளதால், தண்ணீரை தேவையான அளவு பிடித்து வைத்துக் கொள்ளவும்.

எப்பொழுதும் டேங்கில் தண்ணீர் சேமித்து வைத்துக் கொள்ளவும்

செல்போன்களை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளவும். இடி, மின்னல் சமயத்தில் செல்போன்களைப் பயன்படுத்த வேண்டாம். இடி, மின்னல் சமயத்தில் மரங்களுக்கு அருகாமையில் ஒதுங்குவதைத் தவிர்க்கவும். வீடுகளுக்கு அருகில் பெரிய மரங்கள் இருந்தால் அதற்கு அருகாமையில் அமர்வதைத் தவிர்க்கவும்.

மழை பொழியும் சமயத்தில் மின்கம்பிகள் அறுந்து கிடக்கலாம். எனவே, கவனத்தோடு சாலையில் நடந்து செல்லவும். வீட்டு சுவர்களில் நீர் கசிந்து மின்சாதனங்களில் மின்சாரம் பாய வாய்ப்பு உள்ளது. ஆகையால், மின்சாதனங்களை கவனத்துடன் பயன்படுத்தவும். சுவிட்ச் போடும்போது கவனமுடன் இருக்க வேண்டும். குழந்தைகளை சுவிட்ச் போட அனுமதிக்க வேண்டாம்.

பாதுகாப்பாய் இருப்போம், இணைந்து நிற்போம். இந்தப் பேரிடரையும் எளிதாய் கடப்போம்!

Related Stories

No stories found.